2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானம் அறிவிப்பு

2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கின் போது தெற்கு கலிபோர்னியாவின் போமோனாவில் உள்ள ஃபேர்கிரவுண்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) உறுதிப்படுத்தியுள்ளது.
128 வருட இடைவெளிக்குப் பின்னர் கிரிக்கெட் மீண்டும் ஒலிம்பிக்கில் இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டதிலிருந்து, கிரிக்கெட்டின் ஒலிம்பிக் மறுபிரவேசம் குறித்த உற்சாகம் அதிகரித்து வருகிறது.
கடந்த ஏப்ரல் ஒன்பதாம் திகதி சர்வதேச ஒலிம்பிக் பேரவையின் (ஐ.ஓ.சி) நிர்வாகக் குழு 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டிற்கான வீரர் ஒதுக்கீடுகள் மற்றும் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியது.
இதன்படி, ஆண்கள் மற்றும் பெண்கள் டி20 போட்டிகளில் தலா ஆறு அணிகள் இடம்பெறும் எனவும் ஒவ்வொரு நாடும் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவிக்க முடியும் எனவும் கூறப்பட்டிருந்தது.
ஒரு அணியில் 15 பேர் என மொத்தம் 90 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள். இது 1900 இல் காணப்பட்ட ஒற்றை-போட்டி வடிவத்தில் இருந்து குறிப்பிடத்தக்க பரிணாமத்தை குறிக்கிறது.
எனினும், முழு போட்டி அட்டவணையும் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு அருகில் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், “2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம் என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இது கிரிக்கெட்டின் ஒலிம்பிக் மறுபிரவேசத்திற்கான தயாரிப்புகளில் ஒரு முக்கியமான படியாகும் என்று கூறினார். வேகமான டி20 வடிவம் மூலம் விளையாட்டின் வரம்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை அவர் வலியுறுத்தினார்.
“சர்வதேச கிரிக்கெட் பேரவை சார்பாக, LA28 மற்றும் சர்வதேச ஒலிம்பிக் பேரவையின் ஆதரவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் LA28க்குத் தயாராகி அங்கு கிரிக்கெட்டை மிகப்பெரிய வெற்றியடையச் செய்வதில் அவர்களுடனும் சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுப்பினர்களுடனும் ஒத்துழைக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.