
டிக்கோயாவில் பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் – அமைதிவழி போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை
டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலை முன்னிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் இன்று (08) அமைதியான முறையில் கண்டன போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதனைத் தடுக்க ஹட்டன் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்கொலை செய்துகொண்ட இளம் பெண்ணின் உடலை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், பெண்ணின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும்
போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கடந்த மாதம் 23 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்ட நிலையில்,
அவரது உடல் டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது வைத்தியசாலையில் பணிபுரியும் மூன்று பணியாளர்களால் குறித்த பெண்ணின் உடல் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், சம்பவம் தொடர்பாக தவறிழைத்தவர்களுக்கு எதிராக வைத்தியசாலை நிர்வாகம் இதுவரை எந்தவிதமான சட்டரீதியான அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இதனை எதிர்த்து கடந்த மாதம் 3 ஆம் திகதி கிளங்கன் வைத்தியசாலை வளாகத்தில் பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. அப்போது போராட்டக்காரர்களிடம் வைத்தியசாலை நிர்வாகம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இதுவரை குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இந்த அமைதிவழி கண்டன போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியை வழங்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் இன்று (08) இந்த அமைதிவழி கண்டன போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இந்த போராட்டத்தைத் தடுக்க நோர்வூட் பொலிஸ் நிலையத்தினால் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்த தடை உத்தரவுக்கு அனுமதி வழங்கப்பட்டதன் பேரில், நீதிபதி தமயந்தி பெர்னான்டோ இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், பிரதி தலைவர் கனபதி கனகராஜ், நோர்வூட் பிரதேச சபை முன்னாள் தலைவர் குழந்தைவேல் ரவி, ஹட்டன் நகர சபை பிரதி நகரபிதா பெருமாள் சுரேந்திரன் உள்ளிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பிற தொடர்புடையவர்களுக்கு எதிராகவே இந்த நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

