போர்நிறுத்த உடன்பாட்டுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்பு

போர்நிறுத்த உடன்பாட்டுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்பு

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர்நிறுத்த உடன்பாட்டை ஆசியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்று உள்ளன.

நிம்மதியை வெளிப்படுத்திய அந்த நாடுகள் உடன்பாட்டின் அம்சங்களை இருதரப்பும் மதித்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன.

உடன்பாடு எட்டப்பட்டதாக நேற்றுமுன்தினம் புதன்கிழமை (ஜனவரி 15) பின்னேரத்தில் கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மது அப்துல் ரஹ்மான் அல் தானி அறிவித்த சில மணி நேரங்களில் ஆசிய நாடுகளின் அறிக்கைகள் வெளிவந்தன.

போர்நிறுத்த உடன்பாட்டை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். 15 மாத படுகொலை இனி முடிவுக்கு வரும் என்று மாலத்தீவு ஜனாதிபதி முஹம்மது முயிஸு கூறினார்.

பாலஸ்தீன மக்கள் தங்களது நாட்டை மறுநிர்மாணம் செய்யக் கிடைத்திருக்கும் வாய்ப்பு இந்த உடன்பாடு என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்கும் வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.

காஸாவில் நீடித்த பகைமைப் போக்கு இனி விலகும் என்று நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் தெரிவித்து உள்ளார்.

உடன்பாட்டின் நிபந்தனைகள் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்திய அரசாங்கமும் போர்நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளின் விடுவிப்புக்கான உடன்பாட்டை வரவேற்று உள்ளது.

அது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

“காஸாவில் பாதுகாப்பான, நீடித்த மனிதாபிமான உதவிகளுக்கு இந்த உடன்பாடு வழி அமைக்கும். போர் நிறுத்தத்தையும் பிணை பிடிக்கப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதையும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பேச்சுவார்த்தை மற்றும் அரசதந்திர முயற்சிகளின் வாயிலாக அமைதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது இந்தியாவின் கருத்து,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

உடன்பாட்டை வரவேற்ற ஆசிய நாடுகளில் மலேசியாவும் இந்தோனீசியாவும் அடங்கும்.

மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நிடிக்கும் பூசலுக்கு நிரந்தரத் தீர்வும் அமைதியும் காண போர்நிறுத்த உடன்பாடு ஒரு வாய்ப்பு என்ற மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்து உள்ளது.

“பாலஸ்தீன மக்களுக்கு உறுதுணையாக மலேசியா எப்போதும் விளங்கும். உலகின் ஆக மோசமான பூசல்களில் ஒன்றான காஸா போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்த அனைத்துலக சமூகத்துக்கு ஏற்பட்டு இருக்கும் ஒரு வாய்ப்பாக இந்த உடன்பாட்டை மலேசியா பார்க்கிறது,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.

Share This