சிறைச்சாலை வைத்தியசாலைகளில் ஊழல்

சிறைச்சாலை வைத்தியசாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழித்தல், அனைத்து கைதிகளுக்கும் சிகிச்சை பெறுவதற்கான வசதிகளை வழங்குவது குறித்து சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது, சிறைச்சாலைகளிலுள்ள மொத்த கைதிகளின் எண்ணிக்கை 34,000 -க்கும் அதிகமாக உள்ளது. அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில், முக்கிய பிரச்சினை போதுமான மருத்துவ சிகிச்சை இல்லாமை தற்போதுள்ள மருத்துவ சிகிச்சை வழங்கலிலுள்ள முறைகேடுகள் காரணமாக, அனைத்து கைதிகளும் சிகிச்சை பெறும் வாய்ப்பை இழந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் அரசியலமைப்பின் பிரிவு 12(1), அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என கூறுகிறது. சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் அனைத்து கைதிகளும் எந்த பாகுபாடும் இல்லாமல் மருத்துவ சிகிச்சை பெறவேண்டுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு சட்ட அடிப்படை இருந்தபோதிலும், பெரும்பாலும் அரசியல் அல்லது நிதி அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே சிறைச்சாலை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற முடிவதாக சட்டத்தரணி சேனக பெரேரா அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமக்கு கிடைத்த தகவலுக்கமைவாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து பல ஆண்டுகளாக சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்துவருவதாக தெரியவந்துள்ளது.
எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்ட உடனேயே சிறைச்சாலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவது வழக்கமாகவுள்ளது.
அவர்கள் நோய்வாய்ப்படாவிட்டாலும், அவர்கள் அனைவரையும் வைத்தியசாலையில் அனுமதிக்க அனுமதிப்பது அங்குள்ள வைத்தியர்கள்தான். பாரபட்சமின்றியும் மருத்துவ நெறிமுறைகளின்படியும் தங்கள் தொழிலைச் செய்வதாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டு பணியில் சேரும் இந்த வைத்தியர்கள் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.
தவறான மருத்துவச் சான்றிதழ்களை வழங்கியதற்காக அவர்களில் சிலர் மீது நீதிமன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஹேமந்த ரணசிங்க போன்ற ஊழல் வைத்தியர்களால் ஏற்படுத்தப்பட்ட சட்டவிரோத நடவடிக்கையால், மிகவும் உதவியற்றவர்களும் கீழ் மட்ட சமூகத்தைச் சேர்ந்த பொருளாதார வறுமையால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான கைதிகள் நோய்வாய்ப்படும்போது, அவர்களுக்கு பனடோல் மாத்திரை அல்லது தூக்க மாத்திரைகளே வழங்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு கணக்காய்வுத்திணைக்கள அறிக்கையின்படி, ஒரு சிறைச்சாலை வைத்தியர் மாதத்திற்கு 4,500 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். ஆனால், அவர் 1,290 மணிநேரம் மட்டுமே பணியாற்றியுள்ளார். எனவே, சிறைச்சாலை அமைப்பை மூழ்கடித்துள்ள மருத்துவ அலட்சியம் மற்றும் முறைகேடுகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.
சிறைச்சாலை வைத்தியர்கள், சிறை நிர்வாகத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல என்பதனால், இவர்களின் எந்த நடவடிக்கையையும் சிறைச்சாலை நிர்வாகத்தினால் கேள்வி கேட்க முடியாது என்ற நிலைப்பாடு நிலவுகிறது.
இதனால் சிறைச்சாலையில் என்ன நடக்கிறது என்பதை பொதுமக்களால் அறிந்துகொள்ள முடியாதுள்ளது. சிறைச்சாலையிலுள்ள அனைத்து கைதிகளும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் வைத்திய சிகிச்சை பெறுவதை உறுதி செய்வதற்கான ஒரு திறமையான பொறிமுறையை விரைவாக அமைப்பது அனைத்து அதிகாரிகளின் பொறுப்பாகும்.
ஊழல் நிறைந்த மருத்துவர்களை நீதியின் முன் நிறுத்துவதும் அவசியமாகும் என சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா தனதஞ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.