கனிய மணல் ஆய்வுப் பணிகளால் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பாடு

கனிய மணல் ஆய்வுப் பணிகளால் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பாடு
மன்னாரில் முன்னெடுக்கப்படவிருந்த கனிய மணல் ஆய்வுப் பணிகள் காரணமாக பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இன்று (19) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் இந்தக் கருத்துக்கு பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, ஏற்கனவே மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே, இந்தப் பணிகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க,
“ஆய்வுப் பணிகளில் ஈடுபடுகின்ற தரப்பினருக்குக் கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் வழங்கப்பட்ட ஆவணங்கள் காணப்படுகின்றன.
எவ்வாறாயினும் அவ்வாறான ஆவணங்கள், சட்ட ரீதியாக வழங்கப்பட்டனவா? அல்லது சட்டத்துக்குப் புறம்பாக வழங்கப்பட்டனவா? என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.
அத்துடன், இந்தப் பிரச்சினை தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு விடயத்துடன் தொடர்புடைய பிரதி அமைச்சருக்கு அறிவுறுத்தப்படும்.
மக்களினது மனநிலை மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்பன தொடர்பில் கவனத்திற் கொண்டே அரசாங்கம் தமது பணிகளை முன்னெடுக்கும். ” எனத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தொடர்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னாரில் அவ்வாறான கனிய மணல் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளாதிருப்பதற்கே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
Share This