
கொழும்பு மத்திய பேருந்து நிலையம் புதன்கிழமை திறப்பு
எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு, பொதுமக்களின் நலன் கருதி விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலப்பகுதிக்காக சுமார் 1500 மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஹட்டன், பதுளை, கண்டி, பண்டாரவளை, அனுராதபுரம், திருகோணமலை, யாழ்ப்பாணம், சிலாபம் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களை மையப்படுத்தி, அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக விசேட போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
ரயில்வே திணைக்களமும் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் விசேட புத்தாண்டு சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
குறிப்பாக, கொழும்பு புறக்கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான வடக்கு வழித்தட தொடருந்து சேவைகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை விமான படையின் உழைப்புப் பங்களிப்புடன், சுமார் 424 மில்லியன் ரூபா செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு மத்திய பஸ் நிலையம் எதிர்வரும் புதன்கிழமை காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.
