கொழும்பு – பதுளை இரவு நேர தபால் ரயில் சேவைகள் இன்றும் இரத்து

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் இரவு நேர தபால் ரயிலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணிக்கும் இரவு நேர தபால் ரயிலும் இன்றும் (20) சேவையில் ஈடுபடாது என இலங்கை ரயிலவே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதல்கஸ்ஹின்ன மற்றும் ஒஹிய ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் மார்க்கத்தில் மண் மேடுடன் பாறைகள் சரிந்து விழுந்தமையால், அம்மார்க்கத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாகவே இவ்வாறு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
நேற்றைய தினமும் (19) இந்த இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன.
மரங்கள் மற்றும் மண் மேடுகள் சரிந்து விழுந்தமையால் கடந்த 18 ஆம் திகதி கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயில் இதல்கஸ்ஹின்ன மற்றும் ஒஹிய ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டிருந்தது.
இதன் காரணமாக மலையக ரயில் சேவைகள் கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா வரையும் மற்றும் பதுளையிலிருந்து பண்டாரவளை வரையும் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
