சந்தையில் தேங்காய் மாஃபியா – செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சி: இன்றுமுதல் தீர்வு என்கிறார் அமைச்சர் வசந்த சமரசிங்க
நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு இல்லை. உற்பத்தியும் அதிகமாக இடம்பெற்றுள்ளது. ஆனால், தேங்காய் மாஃபியாக்கள் சந்தையில் விலையை அதிகரிக்கும் நோக்கில் தேங்காய்களை பதுக்கி வைத்திருப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் டி.வி.சானக்க, சந்தையில் தேங்காய்க்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், 240 ரூபாவரை தேங்காயின் விலை உயர்ந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இவரது குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் வசந்த சமரசிங்க இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
சந்தையில் தேங்காய்க்கு செயற்கையான தட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் மாஃபியாக்கள் ஈடுபட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டில் மொத்த தேங்காய் அறுவடை 2,684 மில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது அது 14 வீதம் குறைவாகும். என்றாலும், நாட்டின் தேவைக்கு மேலதிகமான உற்பத்தியே இது. ஆனால், தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தேங்காய்க்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை அதிகரிப்பதே மாஃபியாக்களின் நோக்கமாகும். அதற்கு எதிராக செயல்பட வேண்டியது அரசாங்கத்தின் பணி என்ற அடிப்படையில் தேங்காய் பற்றாக்குறைக்கு தீர்வை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இன்றுமுதல் (நேற்று) 15 இலட்சம் தேங்காய்கள் சதொச ஊடாக மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சதொசயில் 130 ரூபாவுக்கே தேங்காய் விற்பனை செய்யப்படும்.
அரசாங்கத்திற்கு சொந்தமான சிலாபம் மற்றும் குருணாகலை தோட்டங்களின் மூலம் தேங்காய்களை பெற்று இந்த விநியோகத்தை அரசாங்கம் செய்கிறது. அத்துடன், தெங்கு அபிவிருத்தி சபையும் எமக்கு தேங்காய்களை வழங்க உள்ளது.” என்றார்.