வடக்கு கிழக்கில் மாவீரர் துயிலும் இல்ல துப்பரவு பணிகள் ஆரம்பம்

மாவீரர் நாளை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தையும் சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள், பொது அமைப்புகள், பிரதேச மக்கள் இப் பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துயிலும் இல்ல வளாகத்தில் தீபம் ஏற்றி துப்பரவு பணிகளை ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவடட அமைப்பாளர் எஸ்.தவபாலன் உட்பட்ட ஏற்பாட்டு குழுவினர், இளைஞர், பெண்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சுத்தம் செய்யப்பட்டு அதற்கு அருகில் உள்ள இடத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்டு வருகின்றது.
கிழக்கு மாகாணத்திலும் மாவீரர் துயிலும் இல்லங்கள் சுத்தம் செய்யப்படுகின்றன. இளைஞர்கள் – பெண்கள் பலரும் இப் பணியில் ஈடுபடுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டு 27 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை தீபம் ஏற்றப்படும்.
