கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் – நிபந்தனையுடன் ஆதரவளிக்க எதிர்க்கட்சி முடிவு

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் – நிபந்தனையுடன் ஆதரவளிக்க எதிர்க்கட்சி முடிவு

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ முயற்சிக்கு நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த முயற்சிகள் நல்லது என்றும் இலங்கைக்குத் தேவையானது என்றும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி, தெரு வியாபாரிகள் அகற்றப்படாவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தி இந்த முயற்சியை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

சட்டவிரோத வியாபாரிகள் அகற்றப்பட வேண்டும் என்றும், வாகனங்களில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பாகங்களும் அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அங்கீகரிக்கப்படாத பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள், குறிப்பாக பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொலிஸார் ஏற்கனவே ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமீபத்தில் ஜனாதிபதி செயலகத்தில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ முயற்சியைத் தொடங்கினார்.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் இந்த முயற்சிக்கு ஏற்கனவே ஆதரவை வழங்கியுள்ளனர்.

இந்த “சரியான” முயற்சியில் பங்கேற்க ஜனாதிபதி தம்மை அழைத்ததாக சங்கக்கார தெரிவித்திருந்தார். இந்த திட்டம் விரிவானது என்றும் அரசாங்கத்தால் மட்டும் செயல்படுத்த முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

இது இலங்கைக்கு ஒரு நல்ல தொடக்கம் என்றும், பொதுமக்களின் ஆதரவு இதற்குத் தேவை என்றும் மஹேல ஜயவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This