‘கிளீன் ஸ்ரீலங்கா’ – முதல் நாளே அதிரடி நடவடிக்கை – போக்குவரத்து விதிமுறையை மீறினால் சட்டம் பாயும்

‘கிளீன் ஸ்ரீலங்கா’ – முதல் நாளே அதிரடி நடவடிக்கை – போக்குவரத்து விதிமுறையை மீறினால் சட்டம் பாயும்

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புத்தாண்டை முன்னிட்டு இன்று புதன்கிழமை ஆரம்பித்துவைத்த நிலையில், வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டு சில மணித்தியாலங்களிலேயே இத்திட்டத்துடன், இணைந்து  இலங்கை பொலிஸார் e-Traffic என்ற கையடக்க தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தில் பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் இந்த செயலி இன்று பிற்பகல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் பொதுமக்கள், போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து உடனடியாக முறைப்பாடு தெரிவிக்கலாம்.

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk ஊடாக E-services க்குள் பிரவேசிப்பதன் மூலம் e-Traffic கையடக்கத் தொலைபேசி செயலியை உங்கள் கையடக்கத் தொலைபேசியில் இலகுவாகப் பதிவிறக்கம் செய்ய முடியும் என பொலிஸார் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் ஊடாக உங்களது முறைப்பாடுகளை உடனடியாக பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய 607 பொலிஸ் நிலையங்களில் போக்குவரத்து அதிகாரிகள் கடமையாற்றுவதுடன், இந்த e-Traffic கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்துவதன் மூலம் தினசரி வாகன விபத்துக்களை குறைப்பதற்கு பொதுமக்களின் ஆதரவைப் பெறமுடியும் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த செயலியில் உள்ள Camera option icon அல்லது Vedio option iconஐ பயன்படுத்துவதன் மூலம், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் வீதிகளில் இடம்பெறும் பிற சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இந்த கணக்கு மூலம் பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்ப முடியும்.

இவ்வாறு வழங்கப்பட்ட தகவல்களின்படி போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் மற்றும் பிற சம்பவங்களை விசாரணை செய்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பிரிவுகளுக்கு அனுப்புவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை மேற்கொள்ளும்.

விசாரணைகளின் முன்னேற்றத்தை பொலிஸ் தலைமையகம் கண்காணிக்கும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

Share This