சுவீடனில் 2 நாட்களில் இடம்பெயரும் தேவாலயம்

சுவீடனின் வட பகுதியில் 113 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேவாலயம் ஒன்று ஒட்டுமொத்தமாக இடம்பெயர்கிறது. தேவாலயத்தின் கீழ் இருக்கும் நிலப்பகுதி உள்வாங்குவதால் அது 5 கிலோமீட்டர் சாலைப் பயணமாக இடம் மாற்றப்படுகிறது.
கிருணா நகரில் உள்ளது 1912ஆம் ஆண்டு செம்மரத்தில் கட்டப்பட்ட மிகப் பெரிய தேவாலயம். உருளும் தளத்தில் ஒட்டுமொத்த தேவாலயமும் ஏற்றப்பட்டுப் புதிய நகரின் நடுப்பகுதிக்குக் கொண்டுசெல்லப்படுகிறது.
தேவாலயத்தை ஏற்றியிருக்கும் வாகனம் மணிக்கு 500 மீட்டர் வேகத்தில் செல்கிறது. பயணம் இரண்டு நாள்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுரங்கங்களிலிருந்து இரும்புத் தாதுக்களை எடுக்கும் பணிகள் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் அங்கு நடக்கின்றன. அதனால் பழைய நகரமையத்தின் நிலப்பகுதி உள்வாங்கியதால் நிலைமை மோசமாக உள்ளது.
தேவாலயத்தை இடம் மாற்றும் பணிகளில் ஈடுபட்டோர், இதற்காக ஏராளமான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததாகக் கூறினர்.
“இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, மிகப் பெரிய, சிக்கலான நிகழ்வு. தவறுசெய்யத் துளியும் இடமில்லை. ஆனால் எல்லாம் கட்டுக்குள் இருக்கின்றன,” என்று அவர்கள் தெரிவித்தனர்.
மிக அகலமான கட்டடத்திற்குச் சாலையைத் தயார்ப்படுத்துவது மிகப் பெரிய சவாலாய் இருந்ததாகக் கூறப்பட்டது. சாலையின் அகலம் 24 மீட்டருக்கு (79 அடி) விரிவுபடுத்தப்பட்டது. வழியில் இருந்த விளக்குக்கம்பங்களும் போக்குவரத்து விளக்குகளும் அகற்றப்பட்டன.
சுவீடனின் சட்டப்படி, கட்டடங்களுக்குக் கீழே சுரங்கப் பணிகள் நடைபெறுவதற்கு அனுமதியில்லை.
கிருணா தேவாலயம் 35 மீட்டர் உயரமும் 40 மீட்டர் அகலமும் கொண்டது. அதன் எடை 672 டன். 1950ஆம் ஆண்டுக்கு முன்னர் சுவீடனின் ஆக அழகிய கட்டடமாக அது தேர்வுசெய்யப்பட்டிருந்தது.
தேவாலயத்தை இடம் மாற்றுவதற்கான செலவை இரும்புத் தாதுச் சுரங்கத்தை நிர்வகிக்கும் கிருணா நகரின் ஆகப் பெரிய நிறுவனமான எல்கேஏபி (LKAB) ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தது. தேவாலயத்தை மாற்றுவதற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சுவீடன் தொலைக்காட்சி நிறுவனம் ஒட்டுமொத்தப் பயணத்தையும் நேரடியாக ஒளிபரப்புகிறது. வரலாற்றின் ஒரு பகுதி நகரும்போது தானும் அதனுடன் நகர்வதாகத் தொலைக்காட்சி குறிப்பிட்டது.