இலங்கையில் 10 பில்லியன் டொலரை முதலீடு செய்ய விரும்பும் சீன நிறுவனங்கள்
இலங்கையில் 10 பில்லியன் டொலரை முதலீடு செய்ய சீன நிறுவனங்கள் விரும்புவதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசுமுறைப் பயணத்தில் இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் அழைப்பின் பேரில், கடந்த 14 முதல் 17ஆம் திகதி வரை ஜனாதிபதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
பொருளாதார மற்றும் வர்த்தக மேம்பாடு, முதலீடு, சுற்றுலா, டிஜிட்டல் மாற்றம் மற்றும் பல்வேறு ஒத்துழைப்பு குறித்து இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துரையைாடல்களை நடத்தியிருந்தார்.
இந்தப் பயணத்தின் போது, இரு தரப்பினரும் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MoU) கைச்சாத்திட்டனர். அம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஏற்றுமதி சார்ந்த பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
ஜனாதிபதியின் இந்தப் பயணத்தில் சீன அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் (SOE) மற்றும் நிறுவனங்களின் உயர் மட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட “இலங்கையில் முதலீடு செய்யுங்கள்” வட்டமேசை மாநாட்டி உரையாற்றிய ஜனாதிபதி,
இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளை வழிநடத்தும் பரந்த தொலைநோக்கை எடுத்துரைத்தார் மற்றும் இலங்கையில் முதலீடு செய்ய வணிக சமூகம் ஆர்வமுள்ள முக்கிய பகுதிகள் குறித்து தெளிவுபடுத்தியிருந்தார்
முதலீட்டு மன்றத்தில் கலந்து கொண்ட சீன நிறுவனங்கள், எரிசக்தி, வாகன உற்பத்தி மற்றும் கட்டுமானம் போன்ற பல்வேறு துறைகளில் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான முதலீடுகளை இலங்கைக்கு வழங்கத் தயாராக உள்ளதாக கூறியதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.