சீனா-தைவான் பதற்றம் : 120,000 பேரை வெளியேற்றத் திட்டம் வகுத்துள்ள ஜப்பான்

அவசரநிலை ஏற்பட்டால் தைவானுக்கு அருகிலுள்ள தனக்குச் சொந்தமான தீவுகளிலிருந்து 120,000 பேரை வெளியேற்றுவதற்கான திட்டத்தை ஜப்பான் அறிவித்துள்ளது.
தெற்கில் அமைந்துள்ள ஒக்கினாவா மாநிலத்திலுள்ள சக்கிஷிமா தீவுகளில் வசிக்கும் 110,000 பேரும் 10,000 சுற்றுப்பயணிகளும் விமானங்கள், கப்பல்கள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்படுவர்.
அங்கிருந்து அவர்கள் மேற்கிலும் தென்மேற்கிலும் உள்ள மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். ஆறு நாள்களுக்குள் இது நடந்துமுடியும்.
சீனாவிற்கும் தைவானுக்கும் இடையிலான பதற்றநிலை தொடர்ந்து மோசமாகி வருகிறது.
இந்நிலையில், 2026 ஏப்ரல் மாதத்திலிருந்து ஒக்கினாவா மாநிலத்தில், மக்களை வெளியேற்றுவது தொடர்பில் ஒத்திகை பார்க்கத் திட்டமிட்டுள்ளதாக ஜப்பானிய அரசு தெரிவித்துள்ளது.
அவ்வாறு மீட்கப்படுவோர் முதலில் தனியார் பயணப் படகுகள் அல்லது விமானங்கள் மூலம் குறிப்பிட்ட விமான நிலையங்களுக்கும் தென்மேற்கே கியூஷுவில் உள்ள ஒரு துறைமுகத்திற்கும் அழைத்துச் செல்லப்படுவர். அவர்கள் பின்னர் அங்கிருந்து வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா தனக்குச் சொந்தமானது என உரிமைகோரும் தைவானிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலேயே ஜப்பானின் யோனாகுனி தீவு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவற்றுக்கு இடையே ஆயுதத் தாக்குதல்கள் இடம்பெறுவதுபோன்ற சூழல் ஏற்பட்டால், தனது தீவுகளிலிருந்து மக்களை வெளியேற்றுவது குறித்த கலந்துரையாடல்களைத் தீவிரப்படுத்தும் நோக்கில் இத்திட்டத்தை வடிவமைத்துள்ளதாக நேற்று வியாழக்கிழமை (மார்ச் 27) ஜப்பானின் மூத்த அமைச்சரவைச் செயலாளர் யோஷிமசா ஹயாஷி கூறினார்.