பொருளாதார மற்றும் சமூக மீட்பு முயற்சிகளுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக சீனா உறுதி

பொருளாதார மற்றும் சமூக மீட்பு முயற்சிகளுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக சீனா உறுதி

டிட்வா புயலைத் தொடர்ந்து இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக மீட்பு முயற்சிகளுக்கு சீனா தனது பூரண ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் துணைத் தலைவர் வாங் டோங்மிங், ஜனாதிபதி அநுரகுமாரதிஸாநாயக்கவுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி செயலகத்தில் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

வாங் டோங்மிங்கின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

“சீன அரசாங்கமும் மக்களும் இந்த பேரழிவால் மிகவும் வருத்தமடைந்ததாவும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு விரைவாக செயற்பட்டதாகவும்
வாங் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பொருளாதார, கலாச்சார மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என்று அவர் கூறினார்.

இதேவேளை, புயலால்பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பொருள் மற்றும் நிதி உதவி உட்பட சீனாவின் உடனடி பதில் மற்றும் ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

குறிப்பாக இலங்கையின் சேதமடைந்த ரயில் வலையமைப்பை புனரமைப்பதற்கு சீன அரசாங்கத்திடம் தொழில்நுட்ப உதவியையும் அவர் கோரினார்.

பேரிடர் நிலைமை மற்றும் மீட்பு முயற்சிகள் குறித்து சீன தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, மீட்பு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட நபர்களை இடமாற்றம் செய்தல் மற்றும் உணவு மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் ஆகியவை அரசாங்கத்தின் உடனடி முன்னுரிமைகளாகும் என்றும் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கும் கட்டமைக்கப்பட்ட வேலைத்திட்டம் தற்போது நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.

CATEGORIES
Share This