செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி பிரித்தானியாவில் நேற்று வெள்ளிக்கிழமை (15.08.2025) கவயீர்ப்பு நடைப்பணமொன்றும் இடம்பெற்றது.

இந்த கவனயீர்ப்பு நடைப்பயணம் ‘நியாயம் தேடும் நம் பயணம் தொடரும்’ என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

தமிழீழ சுயநிர்ணய அமைப்பு இந்த நடைப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நடைப்பயணத்தின் இறுதியில் பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தில் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தும் கோரிக்கை மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

‘‘2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி யுத்தம் நடைவடைந்து 16ஆண்டுகளை கடந்தும் தமிழ் மக்களுக்கான சர்வதேச நீதி இன்னமும் கிடைக்கவில்லை. தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் இன்றும் பல்வேறு அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

யுத்தத்தின் போது பலர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். அதேபோன்று ஆயிரக்கணக்கானோர் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர். ஆனால், அவர்கள் தொடர்பில் எவ்வித தரவுகளும் இல்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த மறுப்பதுடன், அதனை மூடிமறைக்கும் செயல்பாட்டிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளில் மனித புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த சில மாதங்களாக தோண்டப்பட்டுவரும் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 50இற்கும் மேற்பட்ட உடல்கள் மரபணு பரிசோதனைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளன.

சிறுவர்கள் முதல் பெரியவர்களில் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் நீதியான சர்வதேச விசாரணையொன்று அவசியமாகும். கடந்தகாலத்தில் அதிகாரத்தில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதற்கான சாட்சியங்களை மூடிமறைக்கும் செயல்பாடுகளையே முன்னெடுத்திருந்தன.

செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் சர்வதேச விசாரணையின் அவசியத்தை எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா வலியுறுத்தி வேண்டும்.‘‘ என இந்த ‘நியாயம் தேடும் நம் பயணம் தொடரும்’ நடைப்பயணத்தில் பங்கேற்ற தமிழர்கள் வலியுறுத்தினர்.

Share This