அநுரவால் டில்லியை கையாள முடியுமா?
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை இந்திய தலைநகர் புதுடில்லிக்குச் செல்ல உள்ளார்.
ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவாகிய பின்னர் மேற்கொள்ளும் முதலாவது அரசுமுறை பயணமும் இதுதான். இந்த பயணத்தில் வெளிவிவார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான அரச உயர்மட்ட குழுவொன்றும் பங்கேற்கிறது.
இருநாட்டு அரசியல் உறவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக இதனை சர்வதேசம் பார்க்கிறது. இந்தியாவை கடுமையாக விமர்சித்த கட்சி என்றால் அது ஜே.வி.பிதான். இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற கருத்தியலை இலங்கை முழுவதும் பரப்பிய கட்சியும் ஜே.வி.பிதான்.
இந்திய அமைதிப்படையின் இலங்கை வருகைக்கு எதிராக கடுமையான போராட்டங்களை ஜே.வி.பி 80களின் பிற்பகுதியில் மேற்கொண்டிருந்தது. அதேபோன்று 13ஆவது திருத்தச்சட்டத்தையும் கடுமையாக எதிர்க்கும் கட்சியும் ஜே.வி.பிதான்.
ஐ.தே.க., சு.க., பொதுஜன பெரமுன உட்பட ஏனைய கட்சிகள் பொலிஸ் காணி அதிகாரங்களின்றி 13ஐ அமுல்படுத்துவதில் எமக்கு சிக்கல் இல்லை என கூறிவரும் பின்புலத்தில் மாகாண சபை முறைமை இலங்கையில் நீக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருக்கும் கட்சி ஜே.வி.பி.
ஆனால், காலாதிக்காலமாக அதிகாரப் பகிர்வை கோரும் ஈழத் தமிழர்கள் இம்முறை ஜே.வி.பியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு, கிழக்கு முழுவதும் அமோக ஆதரவை வழங்கியதை இன்னும் இந்தியா உட்பட பல சர்வதேச நாடுகள் வியப்பாகவே பார்க்கின்றன.
என்றாலும், 13ஆவது திருத்தச்சட்டத்தை தமக்கான தீர்வாக தமிழர்கள் கருதுவதால் அதனை தாம் எதிர்க்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்திய பயணத்தில் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் மோடியின் நிலைப்பாடு மீண்டும் தெளிவுபடுத்தப்படும் என இந்திய அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அரசியல் ஆயுதமாக 13ஆவது திருத்தத்தையே இந்தியா இன்னமும் பயன்படுத்துகிறது. புதிய அரசியலமைபொன்று கொண்டுவரப்பட்டாலும் அதில் 13ஐ உள்ளடக்க வேண்டும் என்பதில் இந்திய உறுதியாக இருக்கும் என்பதும் அரசியல் ஆய்வாளர்களது கருத்து.
அநுரவின் இந்த பயணம் என்பது மிகவும் சவால்மிக்கது. இந்தியாவின் திட்டங்களை கடுமையாக எதிர்த்த தரப்பாக அநுர தரப்பு உள்ளது. ஏற்கனவே செய்துக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகளுக்கு என்ன நடக்கப் போகிறது? உத்தேச திட்டங்களுக்கு என்ன நடக்க போகிறது? எதிர்காலத் திட்டங்கள் என்னவாக இருக்கும்? என பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டாலும், இந்தியாவை பகைத்துக்கொண்டு இலங்கையால் ஒரு அடியேனும் முன்னோக்கி நகர முடியாதென்பதே இன்றைய பூகோள மற்றும் இந்தோ – பசுபிக் பிராந்திய அரசியல்.
இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் இலங்கை வளர்ச்சியடையும் பொருளாதாரமாக மாற வேண்டும் என்றால், இந்தியாவின் சில நிபந்தனைகளுக்கு கட்டுபட்டே ஆக வேண்டும். உலக வல்லரசாக இந்தியா இன்னமும் மாறவில்லை என்றாலும், பிராந்தியத்தில் இந்தியாவை எதிர்க்கும் நாடுகளின் நிலைகள் மிகவும் மோசமாகவே உள்ளன. அதனால் அநுர அரசு இந்தியாவின் எண்ணங்களுக்கு அப்பால் செல்ல முடியாது. சில பழையத் திட்டங்களையும் உடன்படிக்கைகளையும் அவ்வாறே தொடர வேண்டும் என்பது யதார்த்தம்.
அநுரவின் பயணம் அதனால்தான் மிக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேர்தல் மேடைகளில் அவர்கள் பேசிய அனைத்தையும் செய்ய முடியாது. ஆட்சிமாற்றத்தின் பின்னர் அரசாங்கத்தின் சில செயல்பாடுகளும் அவ்வாறுதான் உள்ளன. டில்லியை அன்பாக அனுசரித்து சென்றால் அநுரவால் இலகுவாக கையாள முடியும். இல்லாவிட்டால்?
சுப்ரமணியம் நிஷாந்தன்