விண்வெளியில் குழந்தை பிறக்குமா? எலி, பன்றி மீதான சோதனைகள் சொல்வது என்ன?

விண்வெளியில் குழந்தை பிறக்குமா? எலி, பன்றி மீதான சோதனைகள் சொல்வது என்ன?

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சில பத்தாண்டுகளில் மனிதர்களால் செவ்வாய் கிரகத்திற்குச் சென்று அங்கே வாழ இயலும் என்று சில காலமாகக் கூறி வருகிறது.

ஆனால் செவ்வாய் கோளுக்கு மனிதர்கள் செல்ல விரும்புவது ஏன்? பூமி இல்லாமல் மனித வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்கவும் அதை உண்மையாக்கவும் மனிதர்கள் விரும்புகின்றனர்.

பூமியின் சமன்பாட்டை மனிதர்கள் மாற்ற விரும்புகின்றனர். பூமியில் மட்டுமே வாழும் இனம் இல்லை என்று மனிதர்கள் தங்களைக் காட்டிக் கொள்ள விரும்புகின்றனர். அதனால்தான் இத்தனை கடுமையான உழைப்பை அவர்கள் விண்வெளி ஆய்வில் செலுத்துகின்றனர்.

பல ஆண்டுகளாக, பல மில்லியன் கிலோமீட்டர் மனிதர்கள் பயணித்து பிற கோள்களில் வாழ்வதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.

இந்த ஆராய்ச்சியில் அவர்கள் ஓரளவு வெற்றியும் அடைந்துவிட்டனர். அதனால்தான் தற்போது, 9 மாத விண்வெளி வாழ்வுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் போன்ற விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பி வர இயல்கிறது.

விண்வெளியில் ஏற்படும் பிரச்னையை அங்கேயே தீர்த்துக்கொள்ள வேண்டும்

பூமியைத் தாண்டி மனிதர்களால் பிரபஞ்சத்தில் தன்னுடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள இயலுமா?

வெறுமனே விண்வெளிக்கும், மற்றொரு கோளுக்கும் சென்று வருவதால் இது சாத்தியமாகாது. மனிதர்கள் பூமியில் எளிமையாகச் செய்யக்கூடிய பல வேலைகளை விண்வெளியிலும் செய்ய இயல வேண்டும்.

செவ்வாய் கோளில் மனிதன் ஒரு வாழ்க்கையை வாழ விரும்பினால், பூமியில் இருக்கும் வசதிகளை மனிதர்கள் அங்கும் உருவாக்க வேண்டும். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அங்கிருந்து பூமிக்குத் திரும்பி வருவதற்கு பதிலாக, செவ்வாய் கோளில் இருந்தவாறே அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்.

பூமியில் இருந்து செவ்வாய் 225 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த தூரத்தைக் கடக்க நமக்கு குறைந்தது 7 மாதங்கள் தேவைப்படும்.

மனிதர்கள் வாழ வேண்டும் என்றால், செவ்வாய் கோளில் ஏற்படும் பிரச்னைகளை அங்கேயே தீர்த்துக் கொள்வதற்கான வசதி வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அது இல்லை என்றால் மனிதர்களால் பூமியில் வாழும் உயிரினம் என்ற அடையாளத்தை மாற்றிக் கொள்ளவே முடியாது.

எலிகள் மீது நடத்திய சோதனை முயற்சி வெற்றி

ஒருவர் தான் விண்வெளி வீரர் என அழைக்கப்பட வேண்டும் என்று விரும்பினால், அவருக்கு அங்கே இருக்கும் மிகப்பெரிய சோதனை அங்கே குழந்தை பெற்றுக் கொள்வதற்கான சாத்தியக் கூறுகள்தான்.

விண்வெளியில், மற்றொரு கோளில் குழந்தை பெற்றுக் கொண்டு அதை வளர்ப்பது என்பது சாத்தியமாகுமா?

பூமியில் மனிதர்களுக்கு சாதகமாக இருக்கும் சூழல் விண்வெளியில் இருப்பதில்லை. விண்வெளியில் நிலவும் சூழலில் மனிதர்கள் வாழ்வது எளிமையான காரியமும் இல்லை.

உதாரணத்திற்கு, பூமியோடு ஒப்பிடுகையில் விண்வெளியில் நிலவும் கதிரியக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். இது விந்தணு மற்றும் கருப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதைச் சோதனைக்கு உட்படுத்த நாசா, மனித விந்தணுக்களை விண்வெளிக்கு அனுப்பியது.

உறைய வைக்கப்பட்ட விந்தணுவை விண்வெளிக்கு அனுப்பிய பிறகு, அதில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தச் சோதனையில் கதிரியக்கம் காரணமாக டி.என்.ஏ. சேதமடைந்து, அதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

எனவே விண்வெளிக்குச் சென்று அங்கே கருமுட்டைகளில் விந்தணுக்களை செலுத்தி இனப்பெருக்கம் செய்வதற்கான சாத்தியங்கள் குறைவு என்பது உறுதியானது.

இதே போன்றதொரு சோதனையை நாசா விஞ்ஞானிகள் எலிகள் மீது நடத்தினார்கள். உறைய வைக்கப்பட்ட எலியின் விந்தணுக்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, பல மாதங்கள் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு, மீண்டும் பூமிக்கு எடுத்துவரப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதன் சோதனை முடிவுகள் நேர்மறையாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

விண்வெளிக்கு அனுப்பி, திருப்பி எடுத்து வரப்பட்ட எலியின் விந்தணுக்கள் மூலமாக ஆரோக்கியமான, பலமான எலிகள் பிறந்தன. எலிகளின் விந்தணுக்களில் உள்ள டி.என்.ஏக்களில் சேதம் ஏற்பட்டிருந்தது.

ஆனாலும் கருமுட்டைகளுடன் இணைத்து இனப்பெருக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, சேதமடைந்த டி.என்.ஏ பகுதி தானாகச் சரி செய்துகொள்ளப்பட்டதாகக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

விண்வெளியில் மனித குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன?

மனிதர்களின் கருவை விண்வெளியில் வளர்க்க வேண்டுமெனில் அதை அபாயகரமான கதிரியக்கத்தில் இருந்து பாதுகாப்பது அவசியம்.

ஏனெனில், கதிரியக்கத்திற்கு ஆளானால் கருவிலுள்ள செல்கள் கட்டுப்படுத்த இயலாத வகையில் வளர ஆரம்பித்துவிடும். இது மரபுப் பிறழ்வை ஏற்படுத்தி, (Congenital Cancer) புற்றுநோய் போன்ற தீவிர நோய்களைப் பிறந்த குழந்தைக்கு ஏற்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்தும்.

கதிரியக்கம் தவிர்த்து, விண்வெளியில் பிறக்க இருக்கும் குழந்தைகளுக்குப் பல்வேறு சவால்கள் உள்ளன. உதாரணத்திற்கு, ஈர்ப்பு விசை இல்லாமல் விண்வெளியில் இருக்கும் காலம் மற்றும் அதனால் மனித உடல்களில் ஏற்படும் தாக்கம் ஒரு முக்கிய சவால்.

அங்கே போதுமான ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் விண்வெளியில் தங்கி திரும்பிய வீரர்களின் தசைகள் பலவீனம் அடைவதை நாம் ஏற்கெனவே அறிந்திருப்போம். அதே போன்று அவர்களின் எலும்புகளின் அடர்த்தியும் குறையத் துவங்கும். எளிதில் உடையக்கூடிய அளவுக்கு மோசமானதாகக்கூட அது இருக்கலாம்.

அதன்பிறகு, ரத்த ஓட்டம் குறையும். இவை அனைத்துமே விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களின் உடலில் இயற்கையாகவே ஏற்படும் பாதிப்புகள்.

ஈர்ப்பு விசைக் குறைவால் ஏற்படும் பாதிப்பு என்ன?

மனிதர்களால் பூமிக்கு அப்பால் குழந்தை பெற்றுக் கொள்ள இயலுமெனில் அது செவ்வாய்க் கோளில் மட்டுமே சாத்தியமாகும்.

ஏனென்றால், பூமியைப் போன்று இருக்கும் மற்றொரு கோள் செவ்வாய். பூமியில் இருக்கும் ஈர்ப்பு விசையில் 38% ஈர்ப்பு விசைதான் செவ்வாய் கோளில் உள்ளது. குறைவான இந்த ஈர்ப்பு விசை குழந்தையின் பிறப்பு மற்றும் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பூமியில் நிலவும் ஈர்ப்பு விசையானது குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. மனித காதுகளின் உட்பகுதியானது ஈர்ப்பு விசையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி மனிதன் ஓரிடத்தில் நிலையாக நிற்பதற்கும், திசை மற்றும் இயக்கத்தை அனுமானிக்கவும் பெரிய அளவில் பயன்படுகிறது.

உதாரணத்திற்கு, பூமிக்கு வெளியே, ஈர்ப்பு விசை குறைவாக உள்ள விண்வெளி மையத்தில் ஒரு குழந்தை பிறந்து வளர்கிறது என்று கற்பனை செய்து கொள்வோம். அந்தக் குழந்தையிடம் இந்த அனுமானிக்கும் திறனில் மாற்றங்கள் ஏற்படலாம்.

விண்வெளியில் வளர்க்கப்பட்ட எலிகளை பூமிக்குக் கொண்டு வந்து ஆய்வு செய்தபோது, அவற்றால் எது மேலே, எது கீழே என்பதைக் கண்டறிவதில் குழப்பம் நேரிட்டதை ஆராய்ச்சியாளர்கள் உணர்ந்தனர். அவற்றால் திசைகளைக் கண்டறிய இயலவில்லை. எனவே அந்த எலிகளால் முறையாக இயங்க முடியவில்லை.

குழந்தையின் வளர்ச்சி என்பது அடுத்த நிகழ்வு. உண்மையில் ஈர்ப்பு விசை இல்லாத பகுதியில் குழந்தைகளைப் பிரசவிப்பது என்பது மிகவும் சிக்கலானது.

பிரசவத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், சிசேரியன் முறையில் குழந்தைகள் கருப்பையில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்படுகின்றனர். ஆனால் இவையனைத்தும் பூமியில் மட்டுமே சாத்தியம்.

விண்வெளியில் அறுவை சிகிச்சை செய்ய முடியாதது ஏன்?

ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால், விண்வெளியில் அறுவை சிகிச்சை செய்வது என்பது மிகவும் சவாலானது. அறுவை சிகிச்சையின்போது மனித உடலில் கூரிய கருவி கொண்டு கீறப்படும். அப்போது காயங்கள் ஏற்படும். ரத்தம் வெளியேறும்.

ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால், மருத்துவர்களால் அந்த ரத்த வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த இயலாது. கட்டுப்படுத்த இயலாத வகையில் வெளியேறும் இரத்தம் ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் அனைத்து திசைகளிலும் மிதக்கத் தொடங்கும்.

அறுவை சிகிச்சை முடிவதற்கு முன்பே இதைக் கட்டுப்படுத்த இயலாது. ரத்த வெளியேற்றம் காரணமாக சிகிச்சைக்கு உள்ளாகும் கர்ப்பிணிப் பெண் இறக்கவும் நேரிடலாம்.

ரத்தத்தைக் கட்டுப்படுத்தினாலும்கூட, ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் வெட்டப்பட்ட இடத்தில் இருந்து வெளியேறும் ரத்தம் அந்த இடத்தில் குவிந்து மிதக்கத் தொடங்கும். மருத்துவர்களால், இந்த ரத்தக் குவியலைக் கடந்து உடலில் அறுவை சிகிச்சையைச் செய்ய இயலாது.

இதுபோன்ற காரணங்களால்தான், இதுவரை மனிதர்களால் விண்வெளிக்குச் சென்று அங்குள்ள மனிதர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வது என்பது இயலாமல் போனது.

குறைவான ஈர்ப்பு விசை கொண்ட இடங்களில் மருத்துவர்கள் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகளை எலிகள் மற்றும் பன்றிகள் மீது நடத்தியுள்ளனர். ஆனால் இது மனிதர்கள் மீது வெற்றிகரமாக இதுவரை நடத்தப்படவில்லை.

அதனால்தான் தற்போது, ஏதாவது ஒரு விண்வெளி வீரருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என்றாலோ, உடல்நிலை சரியில்லாமல் போனாலோ, அவர் மீண்டும் பூமிக்குத் அழைத்து வரப்படுகிறார்.

விண்வெளியில் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்குமா?

விண்வெளியில் குழந்தை பிறந்தாலும்கூட, குறைவான ஈர்ப்பு விசையில் வளரும் குழந்தையானது பூமியில் பிறந்து வளரும் குழந்தையைக் காட்டிலும் வித்தியாசமானதாக இருக்கும்.

அவர்களின் தோற்றம், செயல்பாடு, நடைமுறை போன்றவையும் வித்தியாசமாக இருக்கும். உதாரணத்திற்கு, பூமியில் பிறக்கும் குழந்தை முதலில் தவழ்ந்து பழகும். விண்வெளியில் பிறக்கும் குழந்தை முதலில் கைகளால் காற்றில் நீந்த கற்றுக் கொள்ளும்.

அதே போன்று குழந்தையின் உடலின் கீழ்ப்பகுதியில் உள்ள எலும்புகள் மற்றும் தசைகள் பலவீனமாகவும் சிறியனவாகவும் இருக்கும். அதே நேரத்தில் மேல் பாகத்தில் உள்ள எலும்புகளும் தசைகளும் வலுவாகவும் பெரியனவாகவும் இருக்கும்.

ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால், விண்வெளியில் மனித உடல்களில் கைகள் உள்பட மேல் பாகங்கள், கால்கள் போன்ற கீழ் பாகங்களைக் காட்டிலும் அதிகமாக இயங்கும்.

விண்வெளியில் மனிதர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நடப்பதற்குப் பதிலாக மிதப்பார்கள். இதனால், மனிதர்கள் விண்வெளியில் கால்களைக் காட்டிலும் கைகளையே அதிகமாகப் பயன்படுத்துவார்கள்.

ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால், உடலின் எடையானது உடலின் மேற்பகுதியை நோக்கியே முன்னேறிச் செல்லும். முகம் அதிக பருமன் கொண்டதாக இருக்கும்.

பூமியில் உள்ள மனிதர்களைக் காட்டிலும் இவர்கள் முகம் சற்று வீங்கியதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கும். எனவே விண்ணில் பிறந்து வளரும் குழந்தைகளை பூமிக்கு அழைத்து வந்தால் அவர்கள் இறந்து போவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

முதலில் நிற்கவும் நடக்கவும் சிரமமாக இருக்கும். மூச்சுவிடுவது பற்றி இப்போது யோசிக்கவே வேண்டாம். பூமியில் உள்ள ஈர்ப்பு விசைக்குத் தகவமைத்துக் கொண்டு வாழ்வதற்கு ஏற்ற வகையில் அந்தக் குழந்தைகளின் வளர்ச்சி இருக்காது.

மனிதர்களுக்கும் ஈர்ப்பு விசைக்கும் உள்ள தொடர்பு என்ன?

ஈர்ப்பு விசை, மனித வாழ்வில் நெருங்கிய தொடர்பைக் கொண்டது. ஈர்ப்பு விசையின்றி மனிதரின் வாழ்க்கையை யோசிக்கவே இயலாது. இந்த விசையானது மனிதர்களின் அடையாளமாக மாறிவிட்டது.

பூமியில் பல மில்லியன் ஆண்டுகளாக மனித இனம் இந்த விசைக்குத் தன்னைப் பழக்கிக் கொண்டுவிட்டது. இந்த ஈர்ப்பு விசை ஏதுமின்றி விண்ணில் வளர்க்கப்படும் மனிதர்கள், பூமியில் உள்ள மனிதர்களில் இருந்து வித்தியாசப்படுவார்கள்.

அவர்கள் பூமியில் வாழும் மனித இனத்தில் இருந்து தனித்த இனமாக அறியப்படலாம். இந்த மனித இனம் விண்வெளியில் மட்டுமே வாழும் சாத்தியங்களைக் கொண்டிருக்கும்.

இவை அனைத்தும் மனித உடல்கள் விண்வெளியில் சந்திக்கும் பிரச்னை. இதனோடு மற்ற சில சவால்களையும் அவர்கள் சந்திக்க நேரிடலாம். அவை, தனித்து விடப்பட்ட ஒரு சூழலில் வளரும் குழந்தையின் மனரீதியான பாதிப்புகள்.

ஒரு குழந்தையை இப்படியான சோதனைக்கு உட்படுத்த அக்குழந்தையின் பெற்றோர்களின் அனுமதியை வாங்கிக் கொள்ள இயலும். ஆனால் அந்தக் குழந்தையின் சொந்த விருப்பம்?

ஒரு சோதனை முயற்சியில் பங்கேற்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை இல்லாத சூழலில் ஒரு குழந்தையை விண்வெளிக்கு அனுப்புவது என்பது தார்மீக அடிப்படையில் பிழையாகும்.

அறிவு முதிர்ச்சி அடையாத வயதில் இருக்கும் ஒரு குழந்தையிடம் இருந்து நாம் எப்படி ஓர் ஒப்புதலை வாங்க இயலும்?

மேலும் ஒரு குழந்தை விண்வெளிக்குச் சென்ற பிறகு அங்குள்ள சூழலுக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளும். அந்தக் குழந்தையால் மீண்டும் பூமிக்குத் திரும்பி வர இயலாது. பூமியில் பிறக்கும் ஓர் உயிரை பூமியில் இருந்து ஒதுக்கி வைப்பது என்பது மனிதாபிமானமற்ற செயல்.

விண்வெளியில் இனப்பெருக்கம் செய்து, மனிதர்கள் அங்கே வாழ்வதில் உள்ள உடல்ரீதியான சவால்கள் மிகவும் அதிகம். மேலும் அந்த முயற்சிகள் மீது எழும் தார்மீக ரீதியிலான குழப்பங்கள் சிக்கலானவையாக உள்ளன.

விண்வெளிக்குச் சென்று குழந்தை பெற்று, அங்கே வாழ்வது என்பது ஒருவித கற்பனையாக இருக்கலாம். இந்தச் சிந்தனைக்கு மனித இனம் அறிவியல் புனைவுகள், புதினங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலமாகப் பல்வேறு கலை வடிவங்களைக் கொடுத்துள்ளது.

உண்மையில் இதில் இருக்கும் பல்வேறு சிக்கல்களைக் கடந்து இந்தச் சிந்தனைக்கு உண்மையான செயல் வடிவத்தை மனிதர்களால் தர இயலும்.

ஆனால் பிரபஞ்சத்தின் எல்லையற்ற விரிவில் பூமிக்கு அப்பாற்பட்ட உலகில் தனது முத்திரையைப் பதிக்க மனிதர்கள் விரும்பும் பட்சத்தில், இத்தகைய புதிர்களுக்கான, சவால்களுக்கான பதில்களை அவர்கள் கண்டடைய வேண்டும்.

இதுவே விண்வெளியில் வாழ வேண்டும் என்ற சிந்தனைக்குச் செயலாக்கம் தருவதற்கான சிறந்த தொடக்கமாக இருக்கும்.

நன்றி – பிபிசி தமிழ்

Share This