
400 பாடசாலைகளுக்குத் தரமான விளையாட்டு மைதானங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி
விளையாட்டுகளில் மாணவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதையும், உடல், சமூக மற்றும் மன நலனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
தேர்வை மையமாகக் கொண்ட கல்வி முறையும், போதுமான வசதிகள் இல்லாமையும் விளையாட்டுகளில் மாணவர்களின் ஈடுபாட்டைக் கட்டுப்படுத்துவதுடன் தேசிய மற்றும் சர்வதேச அளவில் திறமைமிக்க விளையாட்டு வீரர்களைக்
கண்டறிவதையும் தடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, நாட்டின் 10,096 அரசாங்கப் பாடசாலைகளில் சுமார் 5 வீதம் மட்டுமே தரமான அளவில் விளையாட்டு மைதானங்களைக் கொண்டுள்ளன.
இந்த இடைவெளியை நிவர்த்தி செய்வதற்காக, இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கல்வி மண்டலத்திலும் 400 மீற்றர் ஓடுதளத்துடன் கூடிய குறைந்தபட்சம் ஒரு தரமான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 25 மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு தேசியப் பாடசாலை மற்றும் மூன்று மாகாணப் பாடசாலைகள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் நான்கு ஆண்டுகளில் 400 பாடசாலைகள் உள்ளடக்கப்படும். இந்த முயற்சி 2026 மற்றும் 2029 க்கு இடையில் ரூ. 2,010.50 மில்லியன் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்க்பபட்டுள்ளது.
கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவால் முன்வைக்கப்பட்ட இந்தத் தீர்மானம் அமைச்சரவையின்
அனுமதியைப் பெற்றுள்ளது.
