பாடசாலை மாணவர்களை பேருந்திலிருந்து இறக்கிய பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்

பாடசாலை மாணவர்களை பேருந்திலிருந்து இறக்கிய பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்

கினிகத்ஹேன – கடவல பகுதியில் உள்ள பாடசாலையில் பயிலும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிய இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பேருந்து சாலையில் உள்ள பேருந்தின் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பருவச்சீட்டுடன் சென்ற குறித்த மாணவர்களை பேருந்து நடத்துநர் பேருந்திலிருந்து இறக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்த நிலையில் இது தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க, குறித்த பேருந்து நடத்துநருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படவுள்ளது. அவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.

விசாரணைகள் நிறைவடையும் வரையில் அவரை மீண்டும் பணியில் இணைத்து கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கினிகத்தேன கடவளை தமிழ் பாடசாலை மாணவர்கள் இபோச பேருந்தில் அதன் நடத்துநரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இது தொடர்பில் இபோசவின் ஹட்டன் டிப்போ பிரதானிக்கு அழைப்பை ஏற்படுத்திய திகாம்பரம், குறித்த நடத்துனருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மாணவர்களுக்கு இவ்வாறு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்படுகின்றது எனவும், பருவகால சீட்டில் பயணிக்கும் மாணவர்கள் நடத்துனர்களால் அநாகரீகமாக நடத்தப்படுகின்றனர் எனவும் திகாம்பரம் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளதுடன், இவ்வாறான செயல்பாடுகளுக்கு இடமளிக்கவேண்டாம் எனவும்  வலியுறுத்தியுள்ளார்.

 

Share This