
புத்தர் சிலை விவகாரம்! தேரர்கள் உள்ளிட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்
திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதி இன்றி புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேரர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் அனைவரும் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நான்கு பௌத்த பிக்குகளும், ஆறு பொது மக்களுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை டச்பே கடற்கரை மற்றும் போதிராஜ விகாரை சூழலில் நிலவிய பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், புத்தர் சிலை ஒன்றை வலுக்கட்டாயமாக நிறுவ முயன்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தொல்லியல் சட்டங்கள் மற்றும் கரையோரப் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாக வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நீதிமன்ற வளாகத்தில் இன்று அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
