
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் பிரித்தானியா மிகவும் தாமதமாக முடிவெடுத்துள்ளது – அமெரிக்க ஜனாதிபதி அதிருப்தி
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் பிரித்தானியாவின் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு பிரதமர் கியெர் ஸ்டார்மர் அனுமதி அளித்துள்ள நிலையில், பிரித்தானியா மிகவும் தாமதமாக முடிவெடுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனாட்ல் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரித்தானியாவின் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிப்பதில் அந்த நாடு இன்னும் வேகமாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் டொனாட்ல் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் நீரிணை நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், நேட்டோ உறுப்பு நாடுகளைக் கோழைகள் என்றும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், பிரித்தானியா மிகவும் தாமதமாக முடிவெடுத்துள்ளது எனக் கூறியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நல்ல நிலையில் இருந்தாலும், இப்படியான ஒரு சூழல் இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவே அமெரிக்காவின் முதன்மையான நட்பு நாடு என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கைகளுக்கு பிரித்தானியா உடனடியாக பதிலளித்தால், அது ஈரானில் போரை இன்னும் தீவிரப்படுத்தும் என பிரதமர் ஸ்டார்மர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, பிரித்தானிய மக்களின் உயிருக்கும் நலன்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஈரான் தரப்பில் இருந்து தாக்குதலைத் தடுப்பதற்காக மட்டுமே, பிரதமர் ஸ்டார்மர் அரசாங்கம் முன்பு இராணுவத் தளங்களின் பயன்பாட்டை அனுமதித்திருந்தது.
ஆனால் தற்போது ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முடக்கும் வகையில் தாக்குதல் நடத்தும் ஈரானின் இலக்குகளை அழிக்கவும் தங்கள் தளங்களைப் பயன்படுத்தலாம் என பிரித்தானிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
