பிரிக்ஸ் அமைப்பு ‘ஒரு ரத்த காட்டேரி’ – டிரம்ப் ஆலோசகர் கடும் விமர்சனம்

இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் உயர்த்தினார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதால் உக்ரைன் போருக்கு மறைமுகமாக உதவுவதாக கூறி இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்கா எடுத்தது.
இவ்விவகாரத்தில் இந்தியாவை டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் பீட்டர் நவரோ மீண்டும் இந்தியா மீது கடும் விமர்சனத்தை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியா, சீனா, ரஷியாவை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பு நாடுகள், அமெரிக்க வர்த்தகம் இல்லாமல் உயிர்வாழ முடியாது. இந்த நாடுகள் எதுவும் அமெரிக்காவிற்கு விற்காவிட்டால் உயிர்வாழ முடியாது. அவர்கள் பொருட்களை அமெரிக்காவிற்கு விற்கும்போது தங்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளால் அமெரிக்காவின் ரத்தத்தை உறிஞ்சும் காட்டேரிகள் போல் செயல்படுகிறார்கள்.
பிரிக்ஸ் அமைப்பு எவ்வாறு ஒன்றாக இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் வரலாற்று ரீதியாக அவர்கள் ஒருவருக்கொருவர் வெறுக்கிறார்கள். வரிகளை விதிப்பதில் இந்தியா மகாராஜாபோல் உள்ளது. அமெரிக்காவிற்கு எதிராக இந்தியா மிக உயர்ந்த வரிகளை விதிக்கிறது. உக்ரைனை ரஷியா ஆக்கிரமிப்பதற்கு முன்பு இந்தியா ஒருபோதும் ரஷிய எண்ணெயை வாங்கியதில்லை. போருக்கு பிறகுதான் ரஷிய எண்ணெய் வாங்க தொடங்கியது.
ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவுடன் எங்களுக்கு வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுஉள்ளது. எங்கள் சந்தைகள் தேவை என்பதை உணர்ந்து இந்த நாடுகள் எங்களுடன் மிக நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன. இந்தியா ஒரு கட்டத்தில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியா விரைவில் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வரும் என்று நம்புகிறேன். ரஷியா, சீனாவுடன் கூட்டணி வைப்பது இந்தியாவுக்கு நல்ல முடிவை தராது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் இந்தியாவுடனான உறவு சிறப்பாக உள்ளது என்றும் மோடி எப்போதும் எனது நண்பர்தான் என்றும் கூறினார். ஆனால் அவரது ஆலோசகர் தொடர்ந்து இந்தியாவை கடுமை யாக விமர்சித்து வருகிறார்.