பாகிஸ்தானில் பாடசாலை பஸ் மீது வெடிகுண்டு தாக்குதல் – 4 மாணவர்கள் பலி – 38 பேர் காயம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குஸ்தாரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாடசாலை பஸ் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர்.
இந்த பஸ், ஜீரோ பாயிண்ட் என்ற இடத்தில் வந்தபோது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சாலையோரத்தில் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வாகனத்தைப் பாடசாலை பஸ் கடந்து சென்றபோது குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
இந்த குண்டுவெடிப்பில் பாடசாலை பஸ் சிக்கியது. இதில் பஸ்சில் இருந்த மாணவர்கள் படுகாயம் அடைந்து அலறினார்கள். உடனே சம்பவ இடத்துக்கு மீட்புப்படையினர், மருத்துவ குழுவினர் விரைந்து வந்தனர். இந்த குண்டுவெடிப்பில் 4 குழந்தைகள் பலியானார்கள். 38 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, சாலையோரத்தில் இருந்த ஒரு வாகனத்தில் வெடிபொருள் வைக்கப்பட்டு இருந்தது. அந்த வாகனத்தை பாடசாலை பஸ் நெருங்கியதும் தொலைவிலிருந்து குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். இது ஒரு தற்கொலைத் தாக்குதல் ஆகும். இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டு பிடிக்க தீவிர விசாரணைகள் நடந்து வருகிறது என்றார்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறும்போது, அப்பாவி மாணவர்களை குறிவைக்கும் மிருகங்கள் எந்த கருணையும் பெறத் தகுதியற்றவர்கள் என்று தெரிவித்தார்.