சாலையோரம் 15 வயது சிறுமியின் சடலம்! தர்மஸ்தலா விவகாரத்தில் புது உத்தரவு

தர்மஸ்தலா விவகாரத்தில் (Dharmasthala exhumation) நாளுக்கு நாள் ஏகப்பட்ட திருப்பங்கள் நடந்து வருகிறது. அங்கு ஏற்கனவே இரு இடங்களில் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதற்கிடையே அங்கு 15 வயது சிறுமியின் உடல் புதைக்கப்பட்டது குறித்து ஒருவர் புகாரளித்திருந்தார். அந்த புகார் விவகாரத்தில் கர்நாடக காவல்துறைத் தலைவர் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அவர் சொன்ன 13 இடங்களில் சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது இந்த விவகாரத்தில் நாளுக்கு நாள் ஏகப்பட்ட திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் தர்மஸ்தலா விவகாரத்தில் ஒருவர் புகாரளித்திருந்தார்.
அதாவது 12 வருடங்களுக்கு முன்பு சிறுமி ஒருவரை போலீசார் எந்தவொரு விதிகளையும் பின்பற்றாமல் அவசர அவசரமாகப் புதைத்ததாக கூறியிருந்தார். இது பேசுபொருள் ஆனது.
இதற்கிடையே தர்மஸ்தலா கிராமத்தில் சடலங்கள் புதைக்கப்பட்ட வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு , இந்த சிறுமி குறித்த புகாரையும் விசாரிக்கும் என்று கர்நாடக காவல்துறை தலைவர் எம்.ஏ. சலீம் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி ஜெயந்த் என்பவர் தர்மஸ்தலா காவல் நிலையத்தை அணுகி இது குறித்துப் புகாரளித்திருந்தார். அதாவது 2002- 2003க்கு இடைப்பட்ட காலத்தில் தர்மஸ்தலா அடுத்துள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமியின் உடல் சாலையோரம் கிடந்ததாகக் கூறினார்.
ஆனால், போலீசார் அவசர அவசரமாக வழக்குப் பதிவு, பிரேதப் பரிசோதனை என எதுவும் நடத்தாமல் விதிமுறைகளைப் பின்பற்றாமல் அந்த உடலைப் புதைத்ததாக ஜெயந்த் புகாரளித்தார்..
முதலில் ஜெயந்த் ஆகஸ்ட் 2ம் தேதி புகாரைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சமர்ப்பித்தார். சிறப்புப் புலனாய்வுக் குழு அறிவுறுத்தல் பெயரிலேயே தர்மஸ்தலா காவல் நிலையத்தை அணுகி அவர் இந்த புகாரை அளித்தார்.
ஆகஸ்ட் 4ம் தேதி தர்மஸ்தலா காவல் நிலைய போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.. இந்தச் சூழலில் தான் அந்த வழக்கைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றுமாறு சலீம் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 31ம் தேதி தர்மஸ்தலா விவகாரத்தில் 6ஆவது இடத்தில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது தொடர்பான வழக்கையும் சலீம் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றி உத்தரவிட்டார்..
50 வயதுடைய முன்னாள் சுகாதார ஊழியர் கூறிய 13 இடங்களில் இதுவும் ஒன்றாகும். நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த சோதனையில் எலும்புக்கூடுகள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.
தர்மஸ்தலா குளியல் படித்துறை அருகே உள்ள பங்களகுட்டேயில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இது அந்த தூய்மை பணியாளர் குறிப்பிட்ட 11ஆவது மற்றும் 12ஆவது இடங்களாகும்.
இருப்பினும், அங்கு எலும்புக்கூடுகள் எதுவும் கண்டெடுக்கவில்லை. 13வது இடத்தில் இன்று புதன்கிழமை சோதனை நடத்தப்படும் எனத் தெரிகிறது. இந்த இடமும் குளியல் படித்துறைக்கு அருகிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
தூய்மை பணியாளர் சொன்ன இடங்களில் சோதனை கடந்த ஜூலை 29ம் தேதி தொடங்கப்பட்டது.. அதில் 6வது இடத்தில் சில எலும்புகள் கண்டறியப்பட்டன.
அதைத் தொடர்ந்து திங்கட்கிழமை 11ஆவது இடத்திற்கு அருகே அடையாளம் தெரியாத இடத்தில் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அங்குக் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் இப்போது சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
ஒன் இந்தியா – தமிழ்