நடுவானில் இண்டிகோ விமானம் மீது பறவை மோதியது – பட்னாவில் அவசரமாக தரையிறக்கம்

நடுவானில் இண்டிகோ விமானம் மீது பறவை மோதியது – பட்னாவில் அவசரமாக தரையிறக்கம்

பட்னாவிலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் பறவை மோதியதால் பட்னா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் 169 பயணிகள் இருந்தனர், அவர்கள் அனைவரும் எந்த காயமும் இல்லாமல் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

பறவை மோதியதால் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து விமானம் தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அண்மையில் ராஞ்சிக்குச் சென்ற இண்டிகோ விமானம் மீதும் பறவை மோதியது. இதனால் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்தது.

அந்த விமானத்தில் 175 பயணிகள் இருந்தனர். குறித்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது, மேலும் அனைத்து பயணிகளும் காயமின்றி தப்பினர் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

குறித்த இண்டிகோ விமானம் சுமார் 4,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, ​​கழுகு மோதியதில் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“ராஞ்சி அருகே குறித்த இண்டிகோ விமானம் மீது பறவை மோதியது. சம்பவம் நடந்தபோது குறித்த விமானம் சுமார் 10 முதல் 12 கடல் மைல்கள் தொலைவில் 3,000 முதல் 4,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பறவை மோதியதாக சந்தேகிக்கப்படும் காரணத்தால், திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு பயணிக்கவிருந்த ஏர் இந்தியா விமானம் தனது திட்டமிடப்பட்ட பயணத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI 2455 ரத்து செய்யப்பட்டது.

டெல்லியில் இருந்து திருவனந்தபுரத்திற்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI 2454 தரையிறங்கும் போது பறவை மோதியதாக சந்தேகிக்கப்படும் முறைப்பாட்டை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This