மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கும் திட்டத்தை உடன் ஆரம்பிக்குக – அருட்தந்தை மா.சத்திவேல்

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சத்திவேல் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” மலையக பெருந்தொட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு புதிதாக கட்டப்படும் வீடுகள் 10 பேர்ச்சஸ் கொண்டவையாக இருக்கும் என அண்மையில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் அமைச்சர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டதோடு அதனை நிரூபிக்கும் வகையில் பூனாகலையில் வீட்டு திட்டத்தினை ஆரம்பித்துள்ளமையை வரவேற்கின்றோம்.
பயனாளிகளுக்கு வீடுகள் கையளிக்கும் போது நிலத்திற்கான உரிமை பத்திரத்தையும் கையளிக்குமாறு கூறுகின்றோம்.
மலையக தொழிலாளர்களுக்கான வீடுகள் என்பது தொழிலை மையப்படுத்தி தொழில்துறையை பாதுகாத்து வளர்ப்பதற்கான திட்டம் என்பதை நாம் அறிவோம்.
இந்நிலையில் மலையகம் எனும் தேசத்தை உடல் உயிர் தியாகத்தால் உருவாக்கி 200 வருடங்களுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக அம் மண்ணிலேயே வாழ்ந்து வருபவருக்கு காணி அல்லது வீட்டுடன் காணி வழங்கும் வேலைத்திட்டம் எந்த ஒரு ஆட்சியாளர்களுக்கும் இல்லை. இது தேவையான தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஏனையோரை அவர்களின் மண்ணிலிருந்து வெளியேற்றும் பேரினவாத மகா வம்ச சிந்தனை என்பதோடு இதனை கிளீன் செய்ய தேசிய மக்கள் சக்திக்கு இயலுமா? முயலுமா? எனவும் கேட்கின்றோம்.
1935 ஆம் ஆண்டின் காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழ் ஆட்சியாளர் அன்று அரச காணிகளில் வசித்த கிராமிய சிங்கள விவசாயிகளுக்கு அவர்கள் வாழ்ந்து வந்த காணிகளை அவர்களுக்கே சொந்தமாக்கியதோடு அவர்களை தேசிய உற்பத்தி துறையிலும் உள்வாங்கி அவர்களுக்கான சலுகைகளையும் மானியங்களையும் அரசு கொடுத்ததை நாம் அறிவோம்.
தொடர்ந்து மிக அண்மித்த காலங்களில் ரணபிம,ஜயபிம, ஸ்வர்ண பூமி போன்ற வீட்டு திட்டங்களை வீடமைப்பு அமைச்சு நடைமுறைப்படுத்தி உள்ளது. அத்தோடு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுமய திட்டத்தின் கீழ் பல லட்சம் பேருக்கு காணி உரிமையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்ததை முழு நாடும் அறியும்.
மலையக பெருந்தோட்ட காணிகளை அரசு 1970களில் அரசுடமை ஆக்கிய போதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் தேயிலை தோட்டங்கள் கிராமிய ஏழை குடும்பங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. அக்கணிகளை ஏற்றுக்கொண்ட ஏழைகள் ஏதோ ஒரு வகையில் அக்காணியில் தமக்கான வீடுகளை கட்டியும் காணிகளை அபிவிருத்தி செய்தும் கௌரவமான வாழ்வை தமதாக்கி கொண்டதை மலை மக்கள் அறிவர்.
பகிர்ந்தளிக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தொழிலாளர் குடும்பங்கள் நடுத்தெருவில் கைவிடப்பட்டதோடு பலர் வீடுகளை விட்டும் துரத்தப்பட்டனர். அக்காலத்தின் இக்கொடிய அனுபவத்தையும் மலையக மறக்கவில்லை.
இலங்கையின் கிழக்கில் 1940களில் ஆரம்பித்த பலவந்த நில ஆக்கிரமிப்பும் சிங்கள குடியேற்றமும் இன்று வடக்கு வரை விரிந்துள்ளது.
ஆனால் மலையக மண்ணில் 200 வருட வரலாற்றை தமதாக்கி மண்ணிலேயே வாழ்ந்து வரும் தொழிலாளர் வர்க்கத்திற்கும் அவர்களின் வழி வருவதற்கும் காணொளிமையை நிரந்தரமாக பெற்றுக் கொடுத்து தேசிய பொருளாதரத்தில் அவர்களை இணைக்கும் வேலைத் திட்டம் எந்த ஒரு அரசாங்கத்தாலும் முன்வைக்காதது மகாவம்சம் பேரினவாத சிந்தனையாகும்.
மலையக பெருந்தொட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு மட்டும் 1,50,000 அதிகமான வீட்டுத் தேவைகள் இருப்பதாக கூறப்படுகின்றது. அத்தோடு மண்ணிலேயே பிறந்து வளர்ந்து தற்போதைய லயம் எனும் வீட்டுத் தொடரிலிருந்து ஆசிரியர் தொழில் போன்ற அரசு தொழில்களுக்கும், தனியார் துறை துறைகளுக்கும் வேலைக்கு சென்று வருவதோடு இன்னும் பலர் சொந்தமாகவும் தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களை அம் மண்ணிலேயே குடியிருக்க செய்ய திட்டங்கள் இல்லை என்பது அரசாங்கத்தின் மாற்றாம் தாய் மனப்பான்மையையே மையே வெளிப்படுத்துகின்றது.
மலையக பெருந்தோட்ட தொழிலாளருக்கு மலையகத்தில் வீடு கட்ட காணி இல்லை எனக் கூறிய ஜனாதிபதியும் அவரது அமைச்சரவையும் தற்போது கடந்த அரசாங்கம் அறிவித்த பத்து பேர்ச் காணியுடனான வீட்டு திட்டம் என்பது அன்மித்து வரும் தேர்தலை மையப்படுத்திய வேலை திட்டம் என்பதில் சந்தேகம் இல்லை.
மலையக மக்களுக்கு வீடு கட்டுவதற்கு காணி இல்லை; அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படும் என்றெல்லாம் கருத்து கூறியவர்கள் இப்போது தனியார் முதலீட்டாளர்களுக்கு மலையகத்தின் காணிகளை கொடுக்க உத்தேசித்திருப்பது மலைய மக்களை சிதைக்கும் இன்னும் ஒரு வேலை திட்டம் என்றும் அடையாளப்படுத்தலாம்.” – என்றார்.