பிரிட்டனின் பிழையை கண்டுபிடிக்க முன் கூறியபடி புதிய அரசியலமைப்புக்கான பணியை ஆரம்பியுங்கள் – மனோ அரசுக்கு ஆலோசனை

பிரிட்டனின் பிழையை கண்டுபிடிக்க முன் கூறியபடி புதிய அரசியலமைப்புக்கான பணியை ஆரம்பியுங்கள் – மனோ அரசுக்கு ஆலோசனை

பிரிட்டன் அரசாங்கம் சார்பாக பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் டேவிட் லெம்மி அறிவித்த தடைகள், இலங்கையில் தேசிய நல்லிணக்க செயற்பாட்டை குழப்புகிறது என இலங்கை வெளிநாட்டமைச்சர் விஜித ஹேரத் கூறுகிறார். டேவிட் லெம்மி, தான் இதை தம் தேர்தல் பிரசாரத்தின் போது தந்த வாக்குறுதிகளுக்கு ஏற்பவே செய்துள்ளதாகவும் கூறுகிறார். இந்நிலையில் நண்பர் விஜித ஹேரத்திடம் நான் கேட்க விரும்புகிறேன். உங்கள் தேர்தல் பிரசாரத்தின் போது நீங்கள் உறுதியளித்த, அரசியலமைப்பு செயற்பாடு, இன்று எங்கே? இன்று இந்நாட்டில் இனவாதம் பகிரங்கமாக பேச படுவதில்லை. அதற்கு காரணம் ஜேவிபி அல்ல.

அன்று நாட்டில் நடைபெற்ற “அரகல” என்ற போராட்டத்தின் போது, அதற்கு முன் கோதாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த பெரும்பாலான சிங்கள இளையோர், இனி இனவாதம் சரி வாராது என்று கை விட்டு விட்டார்கள். அது நல்லது. ஆனால், அது மட்டும் நிரந்தர நல்லிணக்கத்தை கொண்டு வராது. நிலைமை மீண்டும் மாறலாம். ஆகவே காலம் கடக்கும் முன், நீங்கள் உறுதி அளித்தபடி, நல்லாட்சியில் 2018 ஆண்டளவில் இடை நிறுத்த பட்ட, புதிய அரசியலமைப்பு செயற்பாட்டை, நின்ற இடத்தில் இருந்து முன்னெடுங்கள். அதை தானே நீங்கள் உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில், பிரசாரத்தில் சொல்லி வாக்கு வாங்கினீர்கள்? அதை செய்யாமல், இன்று நடக்காத உங்கள் தேசிய நல்லிணக்க செயற்பாட்டை, பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் டேவிட் லெம்மி தடைகளை அறிவித்து குழப்புவதாக கூறுவது வேடிக்கை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில், தனது எக்ஸ் தளத்தில் மனோ எம்பி தெரிவித்ததாவது,

“பொறுப்பு கூற வேண்டியவர்கள் சட்ட விலக்கு பெற இடம் தர மாட்டோம்” என்ற தமது தேர்தல் பிரசார வாக்குறுதிக்கு அமைவாக, பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் டேவிட் லெம்மி, இலங்கையின் பிரஜைகள் நால்வருக்கு எதிராக அறிவித்த தடைகள் இலங்கையின் தேசிய நல்லிணக்க முயற்சிகளை குழப்புவதாக தனது “அங்கேயும் இல்லாத, இங்கேயும் இல்லாத” பதிலில் இலங்கை வெளிநாட்டமைச்சர் நண்பர் விஜித ஹேரத் கூறுகிறார்.

அமைச்சர் அவர்களே, உங்கள் தேர்தல் பிரசாரத்தின் போது நீங்கள் உறுதியளித்த, அரசியலமைப்பு செயற்பாடு, இன்று எங்கே? அதை உங்களை அரசு காலவரையின்றி ஒத்தி வைத்து விட்டது. நல்லாட்சியில் 2018 ஆண்டளவில் இடை நிறுத்த பட்ட, புதிய அரசியலமைப்பு செயற்பாட்டை, நின்ற இடத்தில் இருந்து முன்னெடுப்போம் என்பது உங்கள் தேர்தல் கால வாக்குறுதி. ஜனாதிபதி அனுரகுமார உடன், அந்த புதிய அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவில் நான், நண்பர்கள் ரவுப் ஹக்கீம், ரிஷாத் பதுர்தீன், சுமந்திரன் ஆகியோர் கூட்டாக செயற்பட்டோம்.

ஆகவே காலதாமதம் ஏற்பட முன், உடனடியாக புத்திய அரசியலமைப்பு பணியினை ஆரம்பித்து தேசிய நல்லிணக்க இலங்கை அடையுங்கள். அதுதான் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு நீங்கள் தர கூடிய சரியான பதிலாக இருக்க முடியும்.

Share This