கொழும்பு உலக வர்த்தக மையத்தில் வலம் வந்த “BATMAN” – கைது செய்யப்பட்ட விதம்
கொழும்பு உலக வர்த்தக மையத்தில் (WTC) நான்கு அலுவலகங்களில் அதிகாலையில் நுழைந்து பல திருட்டுக்களை மேற்கொண்ட நபர் ஒருவர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் செய்த திருட்டுக்களின் முடிவில் “BATMAN” என சுவர்களில் எழுதப்பட்டிருந்த குறிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முழுமையான விசாரணையின் பின்னர் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
கடந்த 17ஆம் திகதி கொழும்பில் காணப்படும் உலக வர்த்தக மையத்தில் கிழக்கு கோபுரத்தின் 26ஆவது மாடியில் அமைந்துள்ள நான்கு அலுவலகங்களில் இந்த திருட்டு நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ளன.
மிகவும் நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணைகளில் சந்தேகநபர் மூலம் திருடப்பட்ட மடிக்கணினி மற்றும் கையடக்கத்தொலைபேசி உள்ளிட்ட 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
திருடப்பட்ட இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்த “BATMAN” என்ற குறிப்பு தொடர்பில் பொலிஸார் அதிக அவதானம் செலுத்தியுள்ளனர்.
அதன்படி, உலக வர்த்தக மையத்தின் சிசிரிவி காணொளிகளை பரிசீலிக்கும் போது கடந்த 17ஆம் திகதி அதிகாலை 1 மணிக்கு நவநாகரிக உடை அணிந்த, முகமூடி அணிந்த நபர் ஒருவர் உள்நுழைவது பொலிஸாரின் அவதானத்திற்கு உள்ளாகியுள்ளது.
சந்தேகநபர் சாவி சேமிப்பு இடத்தில் சாவியைப் பெற்று அதில் நான்கு அலுவலகங்களுக்குள் நுழைந்து 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான மடிக்கணனி மற்றும் கையடக்கத்தொலைபேசிகளை திருடியமை சிசிரிவி காணொளிகளில் பதிவாகியுள்ளது.
இதேவேளை, திருடி முடித்தவுடன் சுவரில் “BATMAN” என குறிப்பெழுதும் விதமும் பதிவாகியுள்ளது.
சந்தேக நபர் உலக வர்த்தக மையத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகளை நன்கு அறிந்த ஒருவர் என்று பொலிஸ் அதிகாரிகள் ஊகித்திருந்தனர்.
அதன்படி, அங்கு இதற்கு முன்னர் பணி புரிந்தவர்களின் முகப்புத்தக கணக்குகளை பரிசீலிக்க பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டதையடுத்து ‘BAT MAN’ இன் உருவத்துடன் கூடிய பதிவுகளுடன் கூடிய முகப்புத்தக கணக்கு தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் 23 வயதுடைய பாலித் ரியால் முகைதீன் எனும் பெயருடைய எரித்திரியா வம்சாவளி, சூடானைச் சேர்ந்தவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கொழும்பின் பிரதான சூதாட்ட விடுதிக்கு அருகில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவரது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பு உலக வர்த்தக மையத்தில் மீன் ஏற்றுமதி ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வந்தமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் அங்கு இயக்குநராகப் பணியாற்றியதாகவும், அதனால் அதன் மற்ற அலுவலகங்கள், பாதுகாப்பு மற்றும் சாவி சேமிப்பு இடம் பற்றி அறிந்திருந்ததாகவும் சந்தேகநபர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், திருடப்பட்ட பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு விற்று, அந்தப் பணத்தை சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
(கனூஷியா புஷ்பகுமார்)