தனி நாடாகும் பலுசிஸ்தான்? பாகிஸ்தானுடனான மோதலையடுத்து இந்திய ஊடகங்கள் வெளியிடும் தகவல்

இந்தியாவுடன் மோதி வரும் பாகிஸ்தான் தற்போது அதன் மிகப்பெரிய மாகாணமான பலூசிஸ்தானை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பலுசிஸ்தானில் செயல்பட்டு வரும் பலூச் விடுதலை இராணுவம் என்ற போராளி குழு நேற்று வியாழக்கிழமை பாகிஸ்தான் இராணுவத்தை கடுமையாக தாக்கி அந்த மாகாணத்தின் தலைநகர் குவாட்டா மற்றும் முக்கிய இராணுவ நிலைகளை கைப்பற்றியுள்ளதாகவும், இதனால் பாகிஸ்தானில் இருந்து உடைந்து பலுசிஸ்தான் தனிநாடாகிறதா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
பாகிஸ்தான் தனது கிழக்கு பகுதியில் இந்தியாவுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் மேற்கு பகுதியில் பலூச் விடுதலை இராணுவத்துடன் மோதி வருகிறது. மத்தளத்துக்கு 2 பக்கம் அடி விழும் என்பது போல் இந்திய இராணுவம் ஒருபுறமும், இன்னொரு புறம் பலூச் விடுதலை இராணுவமும் (Baloch Liberation Army), பாகிஸ்தான் இராணுவத்தின் மீது தாக்குதலை தொடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் வர்ணிக்கின்றன.
பலூச் விடுதலை இராணுவம் என்பது பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாக உள்ள பலுசிஸ்தானில் செயல்பட்டு வருகிறது.
பலுசிஸ்தான் என்பது கனிமவளம் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் பாகிஸ்தான் அரசு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது இல்லை. இதனால் மக்கள் பசி, பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர். அதேவேளையில் பலுசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த கனிமவளங்களை வெட்டி எடுத்து சீனாவுக்கு, பாகிஸ்தான் அனுப்பி வருகிறது. இதனை பலுசிஸ்தான் மக்கள் விரும்பவில்லை. இதனால் பாகிஸ்தான் இராணுவத்துக்கு எதிராக பலுசிஸ்தானில் போராளி குழுக்கள் உருவாகி செயல்பட்டு வருகிறது.
இவர்கள் பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் மாகாணத்தை தனியாக பிரிக்க வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து செயல்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான் இராணுவத்துக்கும், பலூச் விடுதலை இராணுவத்துக்கு அவ்வப்போது மோதல் ஏற்படுவது வமை. அதில் முக்கியமான அமைப்பு என்பது பிஎல்ஏ எனும் பலூச் விடுதலை இராணுவமாகும்.
தற்போது இந்த பலூச் விடுதலை இராணுவம் பலுசிஸ்தானில் உள்ள சில முக்கிய இராணுவ நிலைகளை கைப்பற்றி உள்ளது. மேலும் பலுசிஸ்தான் தலைநகராக உள்ள குவாட்டாவை கைப்பற்றி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுபற்றி பலூச் விடுதலை இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஜியாந்த் பலூச் கூறுகையில், ‛‛பாகிஸ்தான் இராணுவத்துக்கு எதிராக எங்களின் படை மொத்தம் 6 இடங்களில் தாக்குலை தொடங்கியது. கெச், மாஸ்டூங், காச்சி மாவட்டங்களில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஐஇடி வெடிகுண்டுகள் வெடிக்க செய்யப்பட்டது. லாஞ்சர்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதல்கள் பாகிஸ்தானின் இராணுவம் மற்றும் அவர்களின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்டது” என்றார்.
இந்த தாக்குதலை தொடர்ந்து குவாட்டாவில் உள்ள ஃப்ரண்டையர் கார்ப்ஸ் தலைமையகம் இப்போது எங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதேபோல் மேலும் சில இராணுவ நிலைகளை கைப்பற்றி உள்ளது பலூச் விடுதலை இராணுவம். மேலும் பலூச் விடுதலை இராணுவம், ஹசாரா டவுன், கிராின ரோடு உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளது. காட்கன் மற்றும் ஷா திம் உள்ளிட்ட இடங்களில் ஐஇடி வகை வெடிகுண்டுகள், கைக் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
இதன்மூலம் பலூசிஸ்தானின் மொத்த கட்டுப்பாடும் விரைவில் பலூச் விடுதலை இராணுவம் வசம் விரைவில் செல்லலாம் என்று இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இது நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் இராணுவம் பலூசிஸ்தானை இழக்கும் அதேவேளையில் பலூச் விடுதலை இராணுவம் சார்பில் தங்களை தனி நாடாக அங்கீகரிக்கும்படி ஐநாவுக்கு கோரிக்கை விடக்சூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் இந்திய ஊடகங்கள் தவிர்ந்த ஏனைய சர்வதேச ஊடகங்களில் பலூச் விடுதலை இராணுவம், பாகிஸ்தான் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் தொடுத்துள்ளதாக மாத்த்திரமே செய்தி வெளியிட்டுள்ளன.