யாழ் மத்திய கலாச்சார நிலையம் – புதிய பொறிமுறை இந்திய தூதுவரிடம் வேண்டுகோள்

*நியமிக்கப்படவுள்ள குழுக்களில் புத்தசாசன அமைச்சர்
*இந்திய தூதரகம் 5 வருடங்கள் கடந்தும் குழுவில் அங்கப்பது நல்லது
*அநுர அரசாங்கம் காரணம் அல்ல
*குறித்த வருடங்களின் பின் கொழும்பு கையாளும் ஆபத்து.
அ. நிக்ஸன்-
இந்திய அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையம், கொழும்பு நிர்வாகத்தை மையமாகக் கொண்ட இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் கீழ் இயங்குவதற்கான காய் நகர்த்தல்கள் மிக நுட்பமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கோட்டாபய, ரணில் ஜனாதிபதியாக இருந்தபோது எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனற்ற நிலையில், தற்போது புதிய வியூகம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.
இதற்காகத் தயாரிக்கப்பட்ட ஆங்கில நகல் பிரதி ஒன்று கொழும்பு உயர் அதிகாரி ஒருவரிடம் இருந்து எனக்கு கிடைத்துள்ளது.
அப் பிரதியின் பிரகாரம், இந்திய தூதுவர், புத்தசாசன அமைச்சர் உள்ளிட்ட சில பிரதிநிதிகளை உள்ளடக்கிய பொறிமுறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இணை முகாமைத்துவ குழு (Joint Management Committee)என ஒன்று இயங்கியது. அதில் இந்தியத் தூதுவர், புத்தசாசன அமைச்சர் அங்கம் பெற்றிருந்தனர்.
ஆனால் பொறிமுறை மூலம் உருவாக்கப்படவுள்ள குழுவில் வேறு சில உயர் அதிகாரிகளும் அங்கம் வகிப்பர்.
அநேகமாக ஆங்கிலத்தில் “Foundation“ என அழைக்கும் முறையில் அக்குழு செயற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலவேளை Trust என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சாத்தியம் உண்டு.
ஆகக் குறைந்தது ஐந்து வருடங்கள் இக் குழு இயங்கும். அதன் பின்னர் இந்திய தூதுவர் அக் குழுவில் இருந்து விலகி விடுவார்.
ஆனால், புத்தசாசன அமைச்சர் உள்ளிட்ட ஏனைய அங்கத்தவர்கள் தொடர்ந்தும் இப் பொறிமுறைக் குழுவில் செயல்படுவர்.
புரிந்துணர்வு உடன்படிக்கை —–
கட்டி முடிக்கப்பட்ட பின்னர் 2022 ஆம் ஆண்டு கலாச்சார மத்திய நிலையத்தை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கும் நோக்கில், தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை, இலங்கை அரச நிர்வாக கட்டமைப்பு என்ற கோணத்தில் ஆங்கிலத்தில் உண்டு.
அதாவது, இறுதி முடிவு இலங்கை அரசுக்குரியது என்ற தொனி அப் புரிந்துணர்வு உடன்படிக்கையில் சொல்லாமல் சொல்லப்படுகிறது.
இப்பின்னணியில் ——
அறக்கட்டளை போன்று அதாவது, ஆங்கிலத்தில் Trust, Foundation, Charity என்ற மூன்று பெயர்களில் ஏதேனும் ஒரு ஆங்கில சொல்லாடல் மூலம் கலாச்சார மத்திய நிலையத்தை செயற்படுத்தும் புதிய பொறிமுறை தான் தற்போது தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இங்கே சந்தேகம் என்னவென்றால்…
1) இந்திய தூதுவர் விலகிய பின்னரான சூழலில், குறித்த குழு முற்று முழுதாக இலங்கை அரச நிர்வாகத்தில் இயங்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
2) யாழ் மாநகர சபையின் கீழ் இல்லாமல், கொழும்பை மையப்படுத்திய ஒரு நிர்வாகத்தில் அதுவும் மாகாண சபையின் அதிகாரத்துக்கும் உட்படாத ஒரு பொறி முறைமையில் செயற்படுத்தப்படும் ஆபத்து உண்டல்லவா?
ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட புதிய பொறிமுறை பற்றிய வரைபு நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள யாழ் மாநகர சபை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அறிய முடிகிறது..
இந்த வரைபுக்கு இணங்கி யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேறுகிறதோ இல்லையோ, ஆனால் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதன் அங்கீகாரத்துடன் செயற்படுத்தப்படவுள்ளமை தெளிவாகத் தெரிகிறது.
அதேநேரம்—-
நன்கொடையாளர் என்ற முறையில் இந்திய தூதரகம் Trust, Foundation என ஆங்கிலத்தில் அழைக்கப்படவுள்ள அறக்கட்டளையில் ஐந்து ஆண்டுகள் அங்கம் வகிப்பதில் நியாயம் உண்டு.
ஆனால் எழும் கேள்விகள் —
1) ஓர் இனத்தின் பண்பாட்டை பிரதிபலிக்கும் கலாச்சார நிலையம் ஒன்றை இயங்குவதற்கான அறக்கட்டளை போன்ற ஒரு அமைப்புக்குள் ஏன் புத்தசாசன அமைச்சு அங்கம் பெற வேண்டும்?
2) இப் புதிய பொறிமுறை தயாரிக்கப்பட்டபோது யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் அல்லது மாநகர சபை ஆணையாளர் மற்றும் அங்குள்ள உயர் அதிகாரிகளுடன் ஏதும் கலந்துரையாடல்கள் நடந்ததா?
3) தமிழ்த் தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஏதும் உரையாடல் நடத்தப்பட்டதா?
ஆகவே, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் நாடாளுமன்ற அங்கீகாரத்துடன் எவ்வாறு தனிக் கட்டமைப்பாக இயங்குகிறதோ, அதேபோன்று இலங்கை அரசின் கீழ் தனிக் கட்டமைப்பாக இயங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் முடிவுறுத்தப்பட்டுள்ளன என்பது மாத்திரம் தெளிவாக தெரிகிறது.
விளக்க குறிப்பு-
A) கலாச்சார மத்திய நிலையம் அமைந்துள்ள காணி மாநகர சபைக்கு உரியது. அவர்களுடன் உரையாடி காணி பெறப்பட்டது. ஆகவே, இக் கலாச்சார நிலையம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற ஒரு வினா எழுகிறது.
B) கலாச்சார மத்திய நிலையத்தை நிர்வகிக்கும் திறன் மாநகர சபைக்கு உண்டு. பணியாளர்கள் தெரிவு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
C) 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண காணி அதிகாரம் என்பது பற்றிய பொருள்கோடல் குழப்பமானது என்ற பின்னணியில், யாழ் மாநகர சபை இதற்கு உரித்தாக முடியாத ஆபத்து.
D) ஒன்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டிட அனுமதி கொழும்பை மையமாகக் கொண்ட நகர சபை தான் வழங்கவும் வேண்டும். இது உண்மையில் 13 இற்கு எதிரான ஒரு சட்ட ஏற்பாடு.
நியாயாதிக்கம் —
1) பதினொரு மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இக் கலாச்சார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
2) நிர்வாகம் பற்றி எழும் சிக்கல்களை கையாளும் நியாயாதிக்கம் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் அல்லது யாழ் துணைத் தூதரகத்துக்கு உண்டு.
3) இக் குழுவில் தூதுவர் தொடர்ந்து அங்கம் வகிக்க வேண்டும். எழும் சிக்கல்கள் தூதரகம் ஊடக கையாளப்பட வேண்டும்.
*”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பு
Trust, Foundation என ஆங்கிலத்தில் அழைக்கப்படவுள்ள இப் புதிய பொறிமுறை கட்டமைப்பை உருவாக்கியது அநுர அரசாங்கம் அல்ல. இலங்கை அரசு என்ற கட்டமைப்பு.
அதாவது, ”இலங்கை அரசு”என்ற கட்டமைப்பு தான், தமிழர்களின் ”அரசியல் விடுதலை” என்பதற்கு தடையான காரணம்.
இக் கட்டமைப்பின் பரிந்துரைகளை அநுர அல்ல எந்த ஒரு சிங்கள தலைவர்களும் நகர்த்தியாக வேண்டும்.
*சமீபத்திய உதாரணம்-
A) தையிட்டு அமைப்பட்டது கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில்.
B) அதனை அநுரகுமார திஸாநாயக்கவினால் தடுக்க முடியவில்லை.
C) மாறாக யாழ்ப்பாணம் சென்றபோது அந்த விகாரையின் பௌத்த குருமாரிடம் ஆசியும் பெற்றிருக்கிறார்….
*இதனை புரிய வேண்டியது யார்???
1965 இல் முருகேசு திருச்செல்வம் அமைச்சராகி விலகிய காலத்தில் இருந்து இன்றைய இளம்குமரன், ரஜீவன் வரையும் ஆதரவு வழங்கி வரும் தமிழ் பிரதிநிதிகள் உணர வேண்டும் அல்லவா ..?
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்