
கோமா நிலைக்குச் சென்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்!
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூளைக் காய்ச்சால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது கோமா நிலைக்கு சென்றுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
54 வயதாகும் டேமியன் மார்ட்டின், கடந்த வாரம் அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதிய பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் போது திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் மூளைக்காய்ச்சல் எனப்படும் ‘மெனிஞ்சைடிஸ்’ (Meningitis) ஆக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
நிலைமை தீவிரமடைந்ததால், வைத்தியர்கள் அவருக்குச் சிறந்த சிகிச்சையை அளிப்பதற்காக அவரை செயற்கையாக கோமா நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
67 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டேமியன் மார்ட்டின், 2006 ஆஷஸ் தொடரின் பாதியிலேயே திடீரென ஓய்வு அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அவர் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்திக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து வெளியிடுகையில், மார்ட்டினுக்கு தற்போது மிகச்சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருடைய மனைவி அமண்டா மற்றும் குடும்பத்தினர், அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
