இந்தியாவை பழி தீர்த்தது அவுஸ்திரேலியா – 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.
அடிலெய்டில் இடம்பெற்ற இந்தப் போட்டி மூன்று நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியுடன் 1-1 என சமநிலையில் உள்ளன.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியிருந்தது. இதன்படி, முதல் இன்னிங்சில் இந்திய அணி 180 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
நிதிஷ் குமார் ரெட்டி அதிகபட்சமாக 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அவுஸ்திரேலியா அணியின் மிச்சல் ஸ்டார்க் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 337 ஓட்டங்களை குவித்திருந்தது. ட்ராவிஸ் ஹெட் 140 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பும்ரா மற்றும் சிராஜ் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
157 ஓட்டங்கள் பின்தங்கியிருந்த நிலையில், தனது இரண்டாவது இன்னிங்சிஸ் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் 175 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். நிதிஷ் குமார் ரெட்டி மீண்டும் அதிகபட்சமாக 42 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
அவுஸ்திரேலியா அணியின் தலைவர் பட் கம்மின்ஸ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அவுஸ்திரேலியா அணிக்கு 19 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், 3.2 ஓவர்களில் விக்கெட் இழப்பு இன்றி 19 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலியா அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் ஆட்ட நாயகனாக ட்ராவிஸ் ஹெட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த போட்டி முடிந்த பின்னர் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, முதல் இடத்தில் இருந்து இந்தியா தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மூன்றாவது இடத்தில் இருந்த அவுஸ்திரேலியா தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. தென்னாப்பிரிக்கா இரண்டாம் இடத்திலும், இலங்கை நான்காம் இடத்திலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.