வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து கவனம்

வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து கவனம்

வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் பல தடவைகள் கலந்துரையாடப்பட்டபோதும் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்கள் இதனால் பெரும் வாழ்வாதாரப் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளமையை கருத்திலெடுத்தாவது விரைவாகவும் முழு வீச்சிலும் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டும் என்று கோரினார்.

வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு எமது திணைக்களங்களால் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல தடவைகள் கலந்துரையாடப்பட்டாலும் செயற்பாட்டு ரீதியில் அதன் தாக்கத்தை மக்களால் உணர முடியவில்லை.

எமக்கு தினந்தோறும் மக்களிடமிருந்து வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடிதம் அனுப்புகின்றனர். தென்னையை வாழ்வாதாரமாகக் கொண்டு வடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன.

எனவே அவர்களின் பாதிப்புக்களை கருத்திலெடுத்து இதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். 2023ஆம் ஆண்டு காலப் பகுதியில் வெள்ளை ஈ தாக்கம் பரவியபோது எடுக்கப்பட்ட முயற்சிகளின் அளவைக்கூட இப்போது காண முடியவில்லை எனவும் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண விவசாயத்திணைக்களத்தால் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்கு சில முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதன் பணிப்பாளர் ஆளுநரிடம் சுட்டிக்காட்டினார்.

தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தன் சில விடயங்களைத் தெளிவுபடுத்தினார். இலங்கை முழுவதும் வெள்ளை ஈ தாக்கம் இருந்தாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே இதன் தாக்கம் பெரிதும் அதிகம் எனக் குறிப்பிட்டார்.

ஏனைய பிரதேசங்களின் காலநிலை குறிப்பாக காற்றுடன் கூடிய மழை காரணமாக வெள்ளை ஈ தாக்கம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதன் பரவல் அதிகமாக உள்ளது எனத் தெரிவித்தார். எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணமே கூடுதல் அக்கறை எடுத்து இதனைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவேண்டும் எனவும், இதற்கான நிரந்தரத் தீர்வு ஆராய்ச்சி அடிப்படையிலேயே அமையவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தற்போது வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்கு வேப்பெண்ணை சேர்வக்ஸல் கரைசலைப் பயன்படுத்தி தென்னை ஓலையின் கீழ்ப் பகுதியைக் கழுவும் செயற்பாடு 2 அல்லது 3 வாரங்களுக்கு ஒரு தடவை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர் இதனை முன்னெடுக்கும் போது அந்தப் பிரதேசத்திலுள்ள அனைத்து தென்னை மரங்களிலும் செய்தால் மாத்திரமே அது உரிய வெற்றியைத் தரும் எனவும் சுட்டிக்காட்டினார்.

பிராந்திய மேலதிக பணிப்பாளர் – ஆராய்ச்சி எஸ்.ராஜேஸ்கண்ணா, ஒட்டுமருந்தை (Surfactant) சாதாரணமாக பூச்சி நாசினிக்கு பயன்படுத்தும் அளவை விட 4 மடங்கு அதிகம் பயன்படுத்தி தெளிப்பதன் ஊடாக வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதில் சாதகமான முடிவு கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதேநேரம் இயற்கைமுறையில் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டுவருவதாக வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்த முயற்சிகளை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் எனவும், மக்களுக்கு வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த அணுகவேண்டிய விவரங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதற்கு அமைவாக உடனடியாகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகம் பாதிப்புக்குள்ளான இடங்கள் தெரிவு செய்யப்பட்டு அங்கு இதைக் கட்டுப்படுத்துவதற்கான மாதிரி செயற்பாடுகள் மக்களுக்கு செய்து காட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அதைத் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதேவேளை இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற இராணுவத்தினரிடம், வெள்ளை ஈ கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைக்கான ஒத்துழைப்பும் கோரப்பட்டது.

கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், தென்னை பயிர்ச் செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

 

Share This