புதிய மது விற்பனை உரிமத்தை இரத்து செய்ய முனைந்தால் நீதிமன்றத்தை நாட வேண்டி ஏற்படும்

புதிய மது விற்பனை உரிமத்தை இரத்து செய்ய முனைந்தால் நீதிமன்றத்தை நாட வேண்டி ஏற்படும்

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்திற்கு இவ்வருடம் புதிதாக வழங்கப்பட்ட மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை, பிரதேச மக்களின் கடும் எதிர்ப்பை கருத்திற்கொண்டு மீளாய்வு செய்வதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கால அவகாசம் கோரியுள்ளது.

முறையாக அனுமதி பெற்ற மதுபான விற்பனை நிலையங்களை மூட நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும் என கூட்டத்திற்கு தலைமைத்தாங்கிய அரசாங்க அமைச்சர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 2024 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை நிலையங்களுக்கான உரிமங்களை இரத்து செய்வதற்கான முன்மொழிவை இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனால், டிசம்பர் 26 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

“யாரால் வழங்கப்பட்டது என்ற விடயம் வெளிப்படுத்தப்பட வேண்டும். அதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும். இந்த கிளிநொச்சி நகரத்திற்கு பொருத்தமில்லை என்பது பலரது கோரிக்கை. இதற்கு ஒரு தீர்மானத்தை இன்று முன்வைப்போம். இந்த தீர்மானத்தை நான் முன்மொழிகின்றேன்.”

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் முன்மொழிவை யாழ்ப்பாணம் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வழிமொழிந்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைகளை உடனடியாக மூடுமாறு கோரி டிசம்பர் 24ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி, கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது. அதிகளவு பெண்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிக்கும் வகையில் மகஜர் ஒன்று மாவட்ட செயலாளரிடம் வழங்கப்பட்டது.

“இளைஞயோரின் தமிழ்த் தேசியத்தை தோற்கடிக்காதே, 30 வருட போராட்டத்திற்கு 36 மதுசாலைகளா மூடுங்கள், மதுபான சாலைகளை மூடு” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மது போதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

குறித்த பகுதியில் புதிதாக மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்படுவதால் இளைஞர்கள் கடும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக போராட்டத்தில் கலந்து கொண்ட அருட்தந்தையொருவர் குறிப்பிட்டார்.

“மதுவற்ற பிரதேசமாக இருந்த கிளிநொச்சி மாவட்டத்தில் மதுபானசாலைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள்பாதிக்கப்படுகின்றனர். மதுவை விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தாய்மார்களும் சகோதரிகளும் இதன் விளைவை அனுபவிக்கிறார்கள். வாழ்க்கையை பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். ”

பிரதேசத்தில் புதிதாக திறக்கப்பட்ட மதுபான விற்னை நிலையங்கயை மூட வேண்டும் என போராட்டம் நடத்தப்பட்டு ஒரு நாளுக்கு பின்னர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்மொழியபட்டபோது, ​​உரிய நடைமுறைக்கு அமைய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்யும் பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சுட்டிக்காட்டியிருந்தார்.

“ஒருசில மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் அதன் உரிமையாளர்கள் அதனை திறப்பதற்கு கோடிக்கணக்கில் செலவழித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கு அனுமதி கொடுத்திருப்பது, மதுவரி திணைக்களம் மற்றும் அந்தந்த பிரதேச டி.எஸ் ஊடாகத்தான் இந்த அனுமதி வழங்கப்படுகிறது. இதனை இரத்து செய்யும்போது நீதிமன்ற பிரச்சினையும் வரும்.”

மேலும், பாடசாலைகள் மற்றும் கோவில்களுக்கு அருகில் இதுபோன்ற மதுபான விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கினால் அதற்கு உரிய அதிகாரிகளே பொறுப்புக்கூற வேண்டுமெனவும் அவர் கூறியிருந்தார்.

“மக்களுடைய போராட்டம், மக்களுடைய கவனயீர்ப்பு தொடருமாக இருந்தால் மக்களுக்கு எதிர்ப்பின் காரணமாக தற்காலிகமாக இரத்து செய்யப்படலாம் அல்லது இரத்து செய்யப்படலாம். நமக்கெல்லாம் ஒரு சட்டம் இருக்கிறது, அதனை உடைத்தெறிந்துகொண்டு செயற்பட முடியாது. இதுத் தொடர்பில் நவடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும். பாடசாலை, கோவில் அருகில் அனுமதி வழங்கியிருந்தால் அதிகாரிகள் பொறுப்பு சொல்ல வேண்டும்.”

கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட மதுபான விற்பனை நிலையங்களை மூடுவது தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட யோசனைகளை கருத்திற் கொண்டு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் இறுதியாக இது தொடர்பில் மீள்பரிசீலனை செய்து முடிவெடுக்க தீர்மானத்திருந்தார்.

“யாரும் உடன்படுகின்ற விடயம்தானே? ஆகவே இந்த இடத்தில் ஒரு தீர்மானம் எடுப்போம் அரச அதிபர், அதிகாரிகள் சொல்வதுபோல் அந்த நியமங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவே அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். எனினும் இதுத் தொடர்பில் மீள் பரிசீலனை செய்து தீர்மானம் எடுப்பது குறித்து தீர்மானம் எடுப்போம்.”

மாவட்ட செயலாளர் அலுவலகத்தின் ஊடாக குழுவொன்று நியமிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதன் பிரகாரம் தீர்மானம் எடுக்க தீர்மானிக்கப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாவட்டச் செயலாளர் எஸ். முரளிதரன் கிளிநொச்சியில் 16 புதிய மதுபான விற்பனை நிலையங்கள் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

“எங்களுடைய மாவட்டத்திலும் அண்மைக்காலமாக 16 மேலதிக மதுபானசாலைகள் குறிப்பிட்ட பிரதேசத்திலே குறிப்பிட்ட கால இடைவெளியியே அமைக்கப்பட்டமை குறித்து அரசாங்க அதிபர்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. நிதியமைச்சு, ஜனாதிபதி உள்ளிட்ட உரியவர்கள் இதற்கு பொருத்தமான நடவடிக்கை எடுப்பார்கள் உன நம்புகின்றேன்.”

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மதுவரி திணைக்கள அதிகாரி ஒருவர், யுத்தம் முடிவடைந்ததில் இருந்து அண்மைக்காலம் வரை கிளிநொச்சி மாவட்டத்தில் 3 உணவகங்களுக்கே மதுபான விநிநோயக உரிமம் இருந்ததாகத் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டிற்கான மதுபானசாலை உரிமங்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடந்த டிசம்பர் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார்

Share This