கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை கடத்த முயற்சி
கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வனை கிளிநொச்சி நகரில் வானில் கடத்தும் முயற்சியொன்று நேற்று வியாழக்கிழமை மாலை நடந்தேறியுள்ளது.
கடமை நேரத்தின் பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த தமிழ் செல்வனை பின்தொடர்ந்து வந்திருந்த வான் யாழ்.-கண்டிவீதியில் வழிமறித்து கடத்தலை முன்னெடுக்க முற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்து செல்ல முயன்ற வேளை அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்ட தமிழ்செல்வன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வன்னியில் முன்னெடுக்கப்படும் சுற்றுச்சூழல் அழிப்பு மற்றும் பரவி வரும் போதைபொருள் கடத்தல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக அம்பலப்படுத்திவரும் தமிழ் செல்வன் தகவல் அறியும் சட்டமூலம் தகவல்களை பெற்று பல ஊழல்களை அம்பலப்படுத்தும் முன்னணி ஊடக செயற்பாட்டளாராகவும் உள்ளார்.
இதனிடையே தமிழ் செல்வன் கடத்தல் முயற்சியை வன்மையாக கண்டித்துள்ள யாழ்.ஊடக அமையம் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மற்றும் ஊடக அமைச்சரிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
இதேவேளை கடத்தலிற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் சாரதியை அடையாளம் காண்பிக்க தயாராக இருப்பதாக தமிழ் செல்வன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.