சிரிய சர்வாதிகாரி அசாத்தை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி
முன்னாள் சிரிய ஜனாதிபதியும் சர்வாதிகாரியுமான பஷார் அல் அசாத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, அவரைக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, அசாத்திற்கு விஷம் கொடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனால், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அசாத்தின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவருக்கு அடைக்கலம் கொடுத்த நாடான ரஷ்யாவிடமிருந்து இந்த சம்பவம் தொடர்பில் எந்த கருத்துகளும் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பர் எட்டாம் திகதி முதல் அசாத் ரஷ்ய ஜனாதிபதி புடினின் (பாதுகாப்பில் மொஸ்கோவில் வசித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக் கிழமை அவர் நோய்வாய்ப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது.
அசாத் சத்தமாக இருமினார், மூச்சுத் திணறினார். அவரால் சுவாசிக்க முடியவில்லை. அறிக்கையின்படி, அவரது உடலில் விஷம் இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில், அவருக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிக்கு மொஸ்கோவில் உள்ள அவரது இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து ரஷ்யா இதுவரை எந்த எதிர்வினையும் தெரிவிக்கவில்லை.
விவாகரத்து செய்ய விரும்பும் மனைவி
கடந்த மாதம் அல்-அசாத்தின் மனைவி அஸ்மா அவரை விவாகரத்து செய்ய விரும்புவதாக தெரியவந்தது. அஸ்மா தனது பிறந்த இடமான பிரித்தானியாவில் தஞ்சம் கோருகிறார், ஆனால் பிரித்தானியா அவருக்கு தஞ்சம் வழங்க மறுத்துவிட்டது.
அஸ்மாவின் கடவுச்சீட்டு காலாவதியானது, மேலும் அவர் தனது கணவருடன் சேர்ந்து சிரிய மக்களை இனப்படுகொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அஸ்மாவும் அவரது குடும்பத்தினரும் தற்போது மொஸ்கோவில் தங்கியுள்ளனர். அரசாங்கம் வீழ்ச்சி கண்ட பின்னர் அசாத்தின் குடும்பம் சிரியாவை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.