முன்னாள் தென்கொரிய ஜனாதிபதி யூனை கைது செய்யவிடாது தடுத்த ஆதரவாளர்கள்
முன்னாள் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலைக் கைது செய்ய முடியாமல் அதிகாரிகள் திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூனைக் கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்ற அதிகாரிகளை அவரது பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதாக சர்வதேச செய்திகள்
தெரிவிக்கின்றன.
குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலைக் கைது செய்ய அந்நாட்டின் ஊழல் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இன்று அவரது வீட்டிற்குச் சென்றனர்.
இதன்போது யூனின் வீட்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கூடியிருந்தனர்.
“ஜனாதிபதி யூனை உயிர் கொடுத்து காப்போம்,” என ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.
மேலும் அதிகாரிகள் யூனின் வீட்டு வளாகத்துக்குள் செல்ல எடுத்த முயற்சிகளும் தோல்வியுற்றன.
இதற்கு முன்பும் யூனின் வீட்டிற்கு அதிகாரிகள் சென்றபோது அவர்களை உள்ளே அனுமதிக்க அவரின் பாதுகாப்புப் படையினர் மறுத்துவிட்டனர்.
கடந்த மாதம் 3 ஆம் திகதி தென்கொரியாவில் இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியதால் யூன் பாரிய விளைவுகளை எதிர்கொண்டுள்ளார்.
அவர் அந்த சட்டத்தை மீளப்பெற்ற போதிலும் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எவ்வாறாயினும் யூனுக்கு எதிராக எதிர்வரும் ஆறாம் திகதி வரை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர் கைது செய்யப்பட்டாலும் 48 மணித்தியாலங்களுக்கு மாத்திரமே அதிகாரிகளால் தடுத்து வைத்திருக்க முடியும்.
இதன்பின்னர், அவரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்ற உத்தரவு தேவைப்படும்.
இந்நிலையில், அதிகாரிகளுடன் யூன் ஒத்துழைக்காதது ஏமாற்றமளிப்பதாக ஊழல் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமது அதிகாரிகளின் பாதுகாப்புக் கருதி கைது நடவடிக்கை இரத்து செய்யப்பட்டதாக ஊழல் புலனாய்வுறுத்துறை தெரிவித்துள்ளது.