பொலிஸார் மீதுதான தாக்குதல் – இராணுவ புலனாய்வு அதிகாரி பின்புலத்தில் இருந்தாரா?
ஆசிரியர் நியமனம் கோரி பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடந்த 2ஆம் திகதி பத்தரமுல்லை இசுருபாய கட்டிடத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை கத்தியால் குத்திய சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் இல்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது மூன்று உத்தியோகத்தர்கள் கூரிய ஆயுதத் தாக்குதல் காரணமாக காயமடைந்திருந்தனர்.
இதுதொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் இந்த தாக்குதலி தொடர்பு பட்டிருப்பதாக விசாரணைகளில் எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணையில் இதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.
இராணுவ புலனாய்வு அதிகாரியின் தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில், பொலிஸ் சிறப்பு புலனாய்வு பிரிவு (SIU) தனியான விசாரணையை ஆரம்பித்துள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவரே பொறுப்பு என தலங்கம பொலிஸார் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கூற்றுக்களை அடுத்தே பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.