அதுல திலகரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட டபிள்யூ.எம். அதுல திலகரத்னவுக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி நளின் டி ஹேவாவசம் ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
போலி ஆவணங்களைத் தயாரித்து வங்கி ஒன்றிலிருந்து 3.5 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பெற்று, அந்தப் பணத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
வங்கியில் இருந்து பணம் பெறுவதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றத்திற்கு ஐந்து ஆண்டுகளும் பெறப்பட்ட பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றத்திற்கு மேலும் இரண்டு ஆண்டுகளும் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் வாதியான வைத்தியர் எஸ்.டபிள்யூ.ஏ. காமினி விமலானந்தவுக்கு 400,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த இழப்பீட்டைச் செலுத்தத் தவறினால், மேலும் 10 மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.