‘சிரியா புதைகுழியில் குறைந்தது 100,000 உடல்கள்’

‘சிரியா புதைகுழியில் குறைந்தது 100,000 உடல்கள்’

வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் முன்னாள் அரசாங்கத்தால் கொல்லப்பட்ட குறைந்தது 100,000 பேரின் உடல்கள் டமாஸ்கஸ் தலைநகரின் புறவெளியில் அமைந்துள்ள புதைகுழி ஒன்றில் குவியலாக கிடப்பதாக சிரியா அவசரகால பணிக்குழுத் தலைவர் மவாஸ் முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் நேற்று டிசம்பர் 16ஆம் திகதி தொலைபேசிவழி பேசிய அவர், தாம் கடந்த பல ஆண்டுகளில் கண்டுபிடித்துள்ள இத்தகைய ஐந்து மனிதக் குவியல் புதைகுழிகளில் சிரியா தலைநகருக்கு 40 கிலோமீட்டர் வடக்கே உள்ள அல் குட்டேஃபா பகுதியும் ஒன்று என்றார்.

“இந்த ஐந்து இடங்களைத் தவிர வேறு பல மனிதக் குவியல் புதைகுழிகளும் நிச்சயம் இருக்கும். அவற்றில் சிரியா நாட்டு மக்களைத் தவிர அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்தவர்களும் இன்னும் வேறு பல வெளிநாட்டவரும் இருப்பார்கள்,” என்றார் முஸ்தஃபா.

முஸ்தஃபாவின் குற்றச்சாட்டுகளை ராய்ட்டர்ஸ் நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

தமது ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக திரு அசாத் பேரளவில் சிவில் போர் தொடுத்து வந்ததில் 2011ஆம் ஆண்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான சிரியர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.

மனித உரிமை மீறல்களைத் தமது அரசாங்கம் செய்யவில்லை என்று திரு அசாத் தொடர்ந்து மறுத்து வந்ததுடன் தமது எதிராளிகளைத் தீவிரவாதிகள் என்றும் குறிப்பிட்டார்.

அசாத் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றதை அடுத்து முஸ்தஃபா சிரியாவைச் சென்றடைந்தார்.

சித்ரவதைக்கு ஆளாகி உயிரிழந்தோரின் உடல்கள் இராணுவ மருத்துவமனைகளிலிருந்து வெவ்வேறு உளவுத்துறை பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு பின்னர் மனிதக் குவியல் புதைகுழி ஒன்றுக்கு மாற்றப்படும் என்றும் இதற்கு சிரியா ஆகாயப் படையின் உளவுத்துறைப் பிரிவு பொறுப்பாக இருந்தது என்றும் முஸ்தஃபா பேட்டியின்போது கூறினார்.

பாதுகாப்பற்ற இந்தப் புதைகுழி இடங்கள் பாதுகாக்கப்படுவது முக்கியம் என்று கவலை தெரிவித்த திரு முஸ்தஃபா, விசாரணைக்கு ஆதாரங்களைக் காக்க வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This