ஓய்வு பெற்றார் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்

ஓய்வு பெற்றார் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளி துறையில் புகழ்பெற்ற பெண்களில் ஒருவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவிலிருந்து ஓய்வு பெற்றார்.

நாசாவில் 27 ஆண்டுகள் பணியாற்றிய சுனிதா வில்லியம்ஸ், மூன்று பயணங்களில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 608 நாட்கள் செலவிட்டுள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் டிசம்பர் 27, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றதை நாசா வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

சுனிதா வில்லியம்ஸின் முதல் விண்வெளிப் பயணம் 2006 இல் நடந்தது.

60 வயதான சுனிதா வில்லியம்ஸ் தற்போது இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

அவரின் ஓய்வு மிகவும் சவாலான விண்வெளிப் பயணத்திற்குப் பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் (Boeing Starliner) விண்கலத்தின் சோதனை ஓட்டத்திற்காக புட்ச் வில்மோருடன் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குச் சென்றிருந்தார்.

முதலில் இது வெறும் 8 நாட்கள் பயணமாகவே திட்டமிடப்பட்டது. எனினும், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு (ஹீலியம் கசிவு) காரணமாக, அவரது பயணம் ஒன்பது மாதங்களாக நீண்டது.

இறுதியில், 2025 மார்ச் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) விண்கலம் மூலம் அவர் பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்பினார்.

இந்த இக்கட்டான சூழலிலும் பதற்றமடையாமல், விண்வெளி நிலையத்தின் கமாண்டராகப் பொறுப்பேற்று பணிகளைத் தொய்வின்றி நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )