மிரட்டி பார்க்கிறீங்களா? தமிழக முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த விஜய்

தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இன்று தனது பிரசாரத்தை மேற்கொண்டு உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாகைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே நான் வந்தேன். மீனவர்கள் பாதுகாப்பு முக்கியம் என்று விஜய் பேசினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது குறித்து மாநாட்டில் பேசுவது குற்றமா? ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதும் நமது கடமையே. தமிழ் மீனவர்கள் தாக்கப்படுவது எப்போது நிற்கும்?
மற்ற மீனவர்கள் என்றால், இந்திய மீனவர்கள் என்றும், தமிழகம் என்றால் தமிழக மீனவர்கள் என்றும் பேசுவதற்கு நாம் ஒன்றும் பாசிச பாஜக கிடையாது. மீனவர்களின் துயரம் குறித்து கடிதம் எழுதிவிட்டுச் செல்ல, கபடதாரி திமுகவும் கிடையாது.
அலையாத்திக் காடுகள் அழிப்பு தடுக்கப்படுமா? சொந்தக் குடும்ப வளர்ச்சியே ஆட்சியாளர்களுக்கு முக்கியமாக இருக்கிறது. நாகை புது பேருந்து நிலையம் சுத்தமாக இருக்கிறதா?
உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் வார இறுதியில் பிரசாரம் மேற்கொள்கிறோம்.
ஆனால், நம் மக்களைச் சந்திக்க எத்தனை நிபந்தனைகள்? அங்கு பேசக்கூடாது, இங்கு பேசக்கூடாது, இது பேசக்கூடாது என்று எத்தனை? நான் பேசுவதே வெறும்3 நிமிடம்தான்.
நம் பிரதமர் மோடியோ அமித் ஷாவோ வந்தால், இவ்வாறு நிபந்தனை போடுவீர்களா? மின்சாரத்தைத் துண்டிப்பீர்களா?
இதையெல்லாம்விட, பஸ் விட்டு வெளியில் வரக்கூடாது, கையசைக்கக் கூடாது என்றெல்லாம் நிபந்தனைகள்.
மிரட்டிப் பார்க்கிறீர்களா? உங்களுக்கே இவ்வளவு இருந்தால், சொந்தமாக உழைத்து வந்த எனக்கு எவ்வளவு இருக்கும்?
மக்கள் நெருக்கடி இருக்கும் பகுதிகளில்தான் அனுமதி கொடுக்கிறீர்கள். எங்கள் போர் முழக்கம் உங்களைத் தூங்க விடாது.
என் மக்களைச் சந்திக்க ஏன் தடை? ஒரு சாதாரண ஆளாக, என் மக்களைச் சந்திக்கச் சென்றாலும் இப்படித்தான் நிபந்தனை போடுவீர்களா? அடக்குமுறை விளையாட்டு வேண்டாம்.
இனிமேல், இவ்வாறு நிபந்தனைத் தடையிட்டால், நான் மக்களிடமே அனுமதி கேட்பேன். பூச்சாண்டி வேலை வேண்டாம்; தேர்தலில் மோதிப் பார்ப்போம்’’ என்று தெரிவித்தார்.