அதிகாலையில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்
அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் குழுவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று அதிகாலை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தனது வாகனத்தில் VIP விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பயணித்த வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால், பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுடன் எம்.பி.க்கு வாக்குவாதம் ஏற்பட்டது, அங்கு காவலர்கள் எம்.பி.யிடம் அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்டுள்ளனர்.
அந்த ஆவணங்களை வழங்க மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் அடாவடியாக நடந்து கொண்டார்.
இன்று (21) காலை நாடாளுமன்றத்துக்கு வந்து கொண்டிருந்த போது இந்த சம்பவத்தை அவர் எதிர்கொண்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட குழு இன்று (21) முற்பகல் 11.00 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளது.
குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட குழு, ஆதாரங்களை மறுஆய்வு செய்வதில் கவனம் செலுத்துவதோடு, விரிவான அறிக்கையை நாடாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கும்.