அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் பாராட்டு

அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் பாராட்டு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (04) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதன் மூலம் இலங்கையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் மிகவும் பாராட்டினார்.

மேலும், பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும் இலங்கை மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் வத்திக்கான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் உறுதி தெரிவித்தார்.

இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையில் நிலவும் அரை நூற்றாண்டு கால இராஜதந்திர உறவுகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

இந்த உறவுகள் இலங்கைக்குப் பல நன்மைகளைப் பெற்றுத் தந்ததாகவும், இது ஆன்மீக ரீதியானது மட்டுமல்லாமல், நாட்டில் மனித கண்ணியத்தை மேம்படுத்துவதில் மிகவும் முக்கியமானதாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்காக அவர் வத்திக்கானுக்கு நன்றி தெரிவித்தார்.

Share This