சஹ்ரானுக்கும், இராணுவ உளவு பிரிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரணை வேண்டும் – பேராயர் மல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்ட பயங்கரவாத குழுவின் தலைவர் எனக் கருதப்படும் சஹ்ரானுக்கும், இராணுவ புலனாய்வுபிரிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பேராயர் மல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று நடைபெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஜனாதிபதியிடம் ஏழு கோரிக்கைகளை முன்வைத்தார்.
இதற்கமைய நாடாளுமன்ற நூலகத்தை மாத்திரம் தற்போது வைக்கப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முழுமையான அறிக்கையை சபையில் சமர்ப்பித்து, மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட அனைத்து சக்திகளையும் அடையாளம் கண்டு, உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தக்கு காரணமானவர்கள் எந்த பதவி நிலையில் இருந்தாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும் எனவும் பேராயர் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தினார்.
2019ம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் உள்ள அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
சஹ்ரான் ஹாசிமிற்கும், இராணுவபுலனாய்வுபிரிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்,
அதேபோல சனல் 4 நிகழ்ச்சியின் முக்கிய சாட்சியான ஆசாத் மௌலானா தெரிவித்த விடயங்கள் உட்பட சனல் 4 இன் ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்.” எனவும் பேராயர் மேலும் வலியுறுத்தினார்.