தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்திற்கு அங்கீகாரம்

தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்திற்கு அங்கீகாரம்

நாடாளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீடுக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள (19ஆம் அத்தியாயமான) தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

குறித்த மேற்பார்வைக் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜீத் இத்திக தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே இச்சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

சிறுவர்களை இலக்கு மேற்கொள்ளப்படும் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தண்டனை முறைகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கிலும், அவ்வாறான குற்றச் செயல்களுக்கு சட்டரீதியாக தண்டனையை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டிருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.

சிறுவர் தடுப்பு நிலையங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்ற உடல் ரீதியான தண்டனைகளை நிறுத்துவதற்கு இலங்கையில் நீண்டகாலமாக சட்ட ஏற்பாடுகள் காணப்படவில்லை.

இது தொடர்பில் சமூகத்தில் விரிவாக பேசப்பட்டு வந்ததுடன், அவ்வாறான நிலைமையை மாற்றுவதற்கு சட்டரீதியான ஏற்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இது பற்றிய சட்டமொன்றுக்கான தேவை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள், சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்ட பல தரப்புக்களிடமிருந்தும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்ட நிலையிலேயே குறித்த சட்டமூலத்தை கொண்டுவந்திருப்பதாக சட்டம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வி அமைச்சு, ஆசிரியர் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களுக்கு அமைய இச்சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருப்பதாக குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஆசிரியர்களை இலக்கு வைத்து கொண்டுவரப்படும் சட்டமூலம் அல்ல என்றும், சிறுவர்களை உடல் ரீதியாக தண்டனைக்கு உட்படுத்தும் அனைவருக்கும் உரிய சட்டம் இது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

 

Share This