இரண்டு வெளிநாட்டு பயணங்களுக்கு தயாராகும் அநுர – இலக்கு என்ன?

இரண்டு வெளிநாட்டு பயணங்களுக்கு தயாராகும் அநுர – இலக்கு என்ன?

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரண்டு அரசுமுறை பயணங்களை வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளதாக தெரியவருகிறது.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இவர் இந்த பயணங்களை மேற்கொள்ள உள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்  அமெரிக்க பயணத்தில் ​​நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 80வது அமர்வில் கலந்துகொண்டு விசேட உரையையும் நிகழ்த்த உள்ளார்.

இதன்போது அமெரிக்க வரிவிதிப்பின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் அவர் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரியவருகிறது.

செப்டம்பர் 22ஆம் திகதி அமெரிக்கச் செல்லும் ஜனாதிபதி 24ஆம் திகதி ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்.

அமெரிக்கப் பயணத்தை தொடர்ந்து செப்டம்பர் 27ஆம் திகதி  ஜனாதிபதி ஜப்பான் செல்கிறார். ஜப்பான் பிரதமரின் அழைப்பில் அவர் அங்கு செல்வதுடன், அந்நாட்டு பிரதமர் உட்பட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட உள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவானது முதல் இதுவரை இந்தியா, சீனா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், வியட்நாம், ஜேர்மனி மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணங்களை மேற்கொண்டுள்ள பின்புலத்திலேயே தற்போது அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தயாராகி வருகிறார்.

ஜனாதிபதியின் ஜப்பான் பயணத்தில் இருநாட்டு இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என அரச தரப்பு செய்திகள் கூறுவதுடன், இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ள ஜப்பானியத் திட்டங்களும் இந்தப் பயணத்தின் பின்னர் விரைவாக ஆரம்பிக்கப்படும் என்றும் தெரியவருகிறது.

Share This