வடக்கில் இருந்து ஐநா ஆணையருக்குச் சென்ற மற்றுமொரு கடிதம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வொல்க்கர் ரோக் அவர்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட்ட பா. அரியநேத்திரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அண்மையில் தமிழ் தேசிய முன்னணியை மையப்படுத்திய தமிழ் தேசியப் பேரவை ஐ.நா ஆணையருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மற்றுமொரு கடிதம் வடக்கில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
…………..
08 ஓகஸ்ட் 2025
திரு. வொல்க்கர் ரோக்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர்
மனித உரிமைகள் உயர் ஆணையாளர் பணிப்பகம்
பொருள்: 05 ஆம் திகதியிட்ட தங்கள் பதிலுக்கான செயல் முற்றுவிப்பு – இலங்கையில் இடம்பெற்ற சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலும் பணிப்பாணை மட்டுப்படுத்தலும் பற்றியது
மேதகையீர்,
மனித உரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள 60 ஆம் அமர்வை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள குடிசார் சமூகத்தினரும் அரசியல் தலைவர்களும் எழுப்பியுள்ள கரிசனைகள் தொடர்பான தங்கள் ஆதரவு காட்டலுக்கும், தங்கள் 05 ஆம் திகிதியிட்ட பதிலுக்கும் முதற்கண் நன்றிகள்.
இதுவரை மாறிமாறி அரச கட்டிலேறும் இலங்கை அரசாங்கங்கள் சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கேற்ற சுயாதீனமான, நியாயமான, செயலூக்கமான பொறுப்புக்கூறலை முன்னெடுக்கத் தவறியுள்ளன என்பதைத் தாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளமைக்கும், யாழப்பாணத்திலுள்ள செம்மணி மனிதப் புதைகுழியை நேரடியாகப் பார்வையிட்டமைக்கும் பாதிப்புற்றோர் சார்பாக நன்றிதெரிவிக்கவும் கடமைப்பட்டுள்ளேன்.
அதேவேளை, மன்னாரில் திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவில் கொக்குத்தொடுவாய், திருகோணமலையில் சம்பூர், மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை என்று வடக்கு-கிழக்கு எங்கணும் இன அழிப்பு நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட மனிதப்புதைகள் பரவிக்கிடக்கின்றன என்பதையும் தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.
இவற்றில் பெரும்பாலானவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் உரோம நியதிச்சட்டம் நடைமுறைக்கு வந்த 2002 ஜூலை 01 ஆம் நாளுக்கு முன்னதாக நடந்தேறியுள்ளன என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியது.
இலங்கை தொடர்பாகத் தாங்கள் காட்டும் தொடர்ச்சியான ஈடுபாட்டைக் கண்டுணரும் அதேவேளை தங்கள் அணுகுமுறை தொடர்பான கடுமையான ஒரு விசனத்தையும் இங்கே அழுத்தமாகப் பதியவேண்டிய நிலை தோன்றியுள்ளது.
தங்களது பதிற் கடிதத்தில் இலங்கை அரசே பரந்த ‘விரிவான விசாரணைச் செயல்முறையை’நடாத்த வேண்டும் என்றும், மனித உரிமைகள் செயலகமும் மனித உரிமைகள் பேரவையும் ‘குறைநிரப்பு மூலோ பாயங்களை’ மாத்திரமே கைக்கொள்ளும் நிலையில் இருப்பதாகவும் கருதும் நோக்குநிலையை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
இலங்கை அரசு நீண்டகாலமாக தக்க பொறிமுறைகளை ஏற்படுத்தாது நீதியை நீர்த்துப் போகச் செய்து வந்துள்ள நிலையிலும், அதற்கும் மேல் ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலும் நடைபெற்றுள்ள கால விரயமும், அனைத்துக்கும் மேல் தற்போது தாங்கள் வெளிப்படுத்தியுள்ள மேற்குறித்த நோக்குநிலையும் மனித உரிமைப் பேரவை மீது பாதிக்கப்பட்ட மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்வதோடு பொறுப்புக்கூறல் விடயத்தில் பேரவை காட்டிவரும் நாட்டத்தின் நம்பகத்தன்மையையும் பலவீனப்படுத்தும் அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது.
மேதகையீர், தாங்கள் குடிசார் சமூகத்தினருக்குத் தந்திருக்கின்ற பதிற்கடிதம் பாதிக்கப்பட்ட மக்களின் மூலக்கோரிக்கைகளில் சூடான விவாதத்தை ஏற்படுத்தியுள்ள பிரதான கேள்விக்கு (இன அழிப்புக்கான நீதி) விடையளிக்காது தவிர்த்துள்ளது.
சிலவேளை குடிசார் சமூகத்தினர் வரைந்திருந்த கடிதம் ஏதோ தெளிவற்ற மொழியில் எழுதப்பட்டதால் இந்நிலை ஏற்பட்டுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆதலால், எனது இந்தச் செயல் முற்றுவிப்புக் கடிதம் எம்மிடையே எழுந்துள்ள முக்கிய கேள்விகளை ஐயந்திரிபறத் தெளிவாக முன்வைக்க முனைகிறது.
* * *
ஆக, பின்வரும் கேள்விகளைத் தங்கள் பார்வைக்கும் பதிவுக்கும் முன்வைப்பதென்ற நோக்கத்துக்கும் அப்பால், தற்போது மேலோங்கியிருக்கும் கேள்விகளுக்கான முறையாகப் பரிசீலிக்கப்பட்ட பதிலையும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்:
1. இன அழிப்புத் தொடர்பான பொறுப்புக்கூறல் இரு வேறான அரசின் பொறுப்புக்கூறலும் தனிநபர்களின் குற்றவியற் பொறுப்புக்கூறலுமாகச் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படவேண்டியவை. இதுதொடர்பில், தங்களது ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் பொருத்தமற்ற ‘குறைநிரப்பு மூலோபாயம்’ என்பது குறித்த குற்றத்தின் கனதியையும் அதன் நம்பகமான சாத்தியக்கூற்றையும் கருத்திலெடுத்து மீளாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.
மானுடத்துக்கெதிரான குற்றங்களும் போர்க்குற்றங்களும் நடைபெற்றுள்ளன என்று ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள கண்டறிதல்கள் அடுத்த கட்ட சர்வதேச வழக்கு நடவடிக்கைகளுக்கு அவற்றை நகர்த்தவேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கும் இத் தருணத்தில், இன அழிப்பு என்ற குற்றம் ஆராயப்படாமலே நீடிக்கும் குறை தொடர்கிறது.
சில தமிழ் அரசியற் பிரதிநிதிகளும் ஊடகங்களும் ஐ.நா. மனித உரிமைப் பேரவை இதைச் சாதிக்கும் வலுவற்றது என்று வாதிடுகிறார்கள். அவர்கள் 2009 ஆம் ஆண்டின் பின் 16 ஆண்டுகளாகியும் இது நடைபெறவில்லையே என்கிறார்கள். எனினும் இக் கருத்தோடு நான் உடன்படவில்லை.
ஏனெனில், 2019 ஆம் ஆண்டில் வெளியான மியான்மாருக்கான சுயாதீனமான சர்வதேச கண்டறிதற் பணிக்குழுவின் (IIFFMM) அறிக்கை இன அழிப்புக்கான நோக்கம் மியான்மாரில் இருந்தமைக்கான சாத்தியக்கூறு சட்டரீதியாக ஆராயப்படவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இலங்கையிலும் இதற்கு ஒப்பான மிக நீண்ட இன அழிப்பு நோக்கம் பற்றிய சாத்தியக்கூறுக்கும் குற்றங்களுக்குமான தடயங்கள் உள்ளன.
இருப்பினும், மனித உரிமைகள் அலுவலக விசாரணையின் (OISL) பணிப்பாணையானது A/HRC/25/1 என்ற தீர்மானத்தால் மிகவும் குறுகியதாய் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையால் குற்றத்தின் கருப்பொருள் தொடர்பாகவும், கால எல்லை தொடர்பாகவும் ஆய்வெல்லை கட்டுப்படுத்தப்பட்டு, போரின் இறுதிக்காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு, மிக முக்கியமான இன அழிப்பு நோக்கத்தை நிறுவுவதிற் சம்பந்தப்படும் காலத்தால் முந்திய சம்பவங்களை அவ் விசாரணை தவிர்த்துவிட்டது.
மியான்மாருக்கு தங்கள் அலுவலகத்தால் ஏற்படுத்தப்பட்ட சுயாதீன விசாரணைப் பொறிமுறை (IIMM) போல் அல்லாமல் இலங்கை தொடர்பாகத் தங்கள் அலுவலகம் ஏற்படுத்தியுள்ள பொறுப்புக்கூறல் கருத்திட்டம் (OSLAP) சுயாதீனத்தன்மையிலும் ஆய்வெல்லையிலும் மேலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது பாரதூரமான இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.
இக் குறையைப் போக்கவேண்டுமாயின் மீண்டுமொரு தீர்மானம் இயற்றப்பட்டு, உரிய கனதியும் ஆய்வெல்லையும் கொண்ட பணிப்பாணை வழங்கப்பட்டு புதிதாக கண்காணிக்கும், அறிக்கையிடும், கண்டறியும் (MRF) பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படவேண்டுமா?
2. அன்றேல், மேற்குறிப்பிட்டதற்கு மாற்றீடாக, மேலதிக தாமதத்தைத் தவிர்க்கும் நோக்கில்–பேரவையில் புதிய தீர்மானங்களை இயற்றுவதற்குப் பதிலாக–மேதகையீர் நேரடியாக ஐ.நா. செயலாளர் நாயகம், பொது அவை, அல்லது பாதுகாப்பு அவை ஆகிய உயர்மட்டங்கள் ஊடாக மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கச் செய்யும் வாய்ப்பு ஏதேனும் உள்ளதா? ஐ.நா. கட்டுமானங்கள் ஒவ்வொன்றுக்கும் தனிவேறான அனுமதிப்புத் தன்மையும் நடைமுறை விதிகளும் உண்டு என்பதை நானறிவேன்.
இருப்பினும், மனித உரிமைப் பேரவை தனது ஈடுபாட்டை மேலே குறிப்பிட்டதைப் போலக் கெட்டிப்படுத்தி, தக்க வழிவரைபடத்தை வகுக்கும் அதேவேளை, அச் செயற்பாட்டுக்குச் சமாந்தரமாக, ஐ.நா. கட்டமைப்பின் ஏனைய படிமுறை வழிகளிலும் பொறுப்புக் கூறலை கால விரயமின்றி உறுதிப்படுத்தும் வகையில் முன்னெடுக்க வாய்ப்புள்ளதா?
3. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றுக்கான பாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்பு நடைமுறைச் சாத்திய மாவதற்கான வாய்ப்புகள் மிக அரிது என்பதைத் தற்போதைய சர்வதேச அரசியல் யதார்த்தங்களின் பின்னணியில் நாம் உய்த்துணர்கிறோம். அப்படி நடந்தாலும், மேலே குறிப்பிட்ட (இன அழிப்பு) குற்றநோக்குக்கான மனநிலைக்கூற்றைப் பகுப்பாய்வு செய்தல் தொடர்பிலும், 2002 ஜூலை முதலாம் நாளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களை உள்ளடக்கவல்ல கால நியாயாதிக்கம் தொடர்பாகவும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்று பொருத்தமாகச் செயலாற்றுமா என்பதையும் மேலதிக சவாலாக உய்த்துணர்கிறோம்.
இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களாக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றுக்குச் செல்லும் அதே வழிவரைபடத்தின் ஊடாக இலங்கை தொடர்பான சிறப்புச் சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயத்தை அமைக்குமாறு—அதிலும் குறிப்பாக மேற்குறித்த கால நியாயாதிக்கம் சார்ந்த குறைகளை நிவர்த்திசெய்யும் வகையில் அதை அமைக்கவேண்டும் என்பதை—எமது கோரிக்கையாக முன்வைப்பதற்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று கருதுகிறோம்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டோரிற் பெரும்பாலானவர்களிடையே நிலவும் சட்டவியற் கலைச்சொற்கள் பற்றிய தெளிவற்ற தன்மை மேலும் குழப்பங்களை ஏற்படுத்துகிறது. குறித்த ஒரு நாட்டின் நிலைமை தொடர்பான சிறப்புச் சர்வதேசக் குற்றவியற் தீர்ப்பாயம் என்ற பொறிமுறையை 2002 ஆம் ஆண்டில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்று தோன்றியபின் உருவாக்கவே இயலாது என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.
மேதகையீர், குறித்த இந்தப் பார்வை சரியானதா என்ற தெளிவுபடுத்தலையும், குறித்த குற்றங்களைச் சர்வதேச சட்டம் சார்ந்து விரிவான முறையிற் கையாள எவ்வாறான வழிமுறைகள் உள்ளன என்பதையும் எமக்கு அறியத்தரமுடியுமா?
4. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் கருத்திட்டத்தை (OSLAP) சிரியா நாட்டுக்கு அமைக்கப்பட்டுள்ள முழுமையான சர்வதேச, பக்கச்சார்பற்ற சுயாதீனப் பொறிமுறைக்கு (IIIM) ஒப்பான பணிப்பாணையுடன் முழுத் தனித்துவத்தோடு இயங்கும் வகையில் தரமுயர்த்தவேண்டும்.
இதைச் சாத்தியமாக்க பாதிக்கப்பட்ட மக்களாக, எந்த மன்றில், எவ்விதத்தில், எதை நாம் முன்னெடுக்கவேண்டும் என்பது பற்றிய விதிமுறைகள் பற்றியும் அதற்கேற்ற அரசியற் படிமுறைகள் பற்றியுமான வழிவரைபடத்தைத் தயைகூர்ந்து கோடிகாட்டுவீர்களா?
* * *
முடிவாக, நான் இங்கு முன்வைத்துள்ள கேள்விகள் ஓர் அரசற்ற தேசமாகவும், முறையற்ற ஓர் அரச இறைமை தம்மீது தமது சுயவிருப்புக்கு அப்பால் திணிக்கப்பட்டுள்ள நிலையில் வாடுகின்ற ஒரு மக்களின் அரசியல் பணிப்பாணையையும் எதிர்பார்ப்பையும் பிரதிநிதித்துவம் செய்பவை என்ற அடிப்படையிலும் எழுப்பப்பட்டுள்ளன.
இவற்றை உரியவகையிற் பரிசீலித்து விடையிறுக்கும் தயவான பதிலைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். பாதிப்புக்குள்ளாகியுள்ள தமிழ் மக்கள் தமக்குரிய பொது வேட்பாளராக 2024 ஜனாதிபதி தேர்தலில் எனக்கு வழங்கியுள்ள விருப்புவாக்குகளில் இருந்து பிறந்த மக்களாணையின் பாற்பட்டும், அறக் கடப்பாட்டின் பாற்பட்டும் நான் இங்கு முன்வைத்துள்ளவற்றைக் கருத்திலெடுத்து இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பான பேரவையின் எதிர்காலப் பாதை உற்றதாய் அமைந்திடவேண்டும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன்.