கனடாவில் நீடிக்கும் அரசியல் கொந்தளிப்பு – தலைமை பதவி போட்டியில் இருந்து அனிதா விலகல்
கனடாவில் அரசியல் கொந்தளிப்பு நீடித்துள்ள நிலையில், லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அந்த கட்சியின் முக்கிய உறுப்பினரும், அமைச்சருமான அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் பதவி விலகினார். அவரின் பதவி விலகளுக்கு பின்னர் லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியெழுந்துள்ளது.
இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் அடுத்த தலைவராக தெரிவுசெய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
அனிதா ஆனந்த் ட்ரூடோவின் மாற்றாகக் கருதப்பட்டார். இந்நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்று அனிதா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடுத்த தேர்தல் வரை தனது தொகுதி மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் சேவை செய்வேன் என்று கூறிய அவர், தனது எதிர்காலப் பயணத்தைப் பற்றியும் யோசித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் அறிவித்தார். தமிழ் தந்தை மற்றும் பஞ்சாபி தாயின் மகளான அனிதா, ட்ரூடோவின் அமைச்சரவையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
அவர் பாதுகாப்பு மற்றும் பொது சேவை போன்ற அமைச்சகங்களையும் வகித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சராக, ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு அனிதா தலைமை தாங்கினார்.